கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை:
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு 540 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் தற்போது நிலைகொண்டு இருக்கிறது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம்.

நேற்று என்னுடைய தலைமையில் இது தொடர்பாக கூட்டத்தை கூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை உஷாராக கவனிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்.

சென்னையிலும் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று சொல்கின்றனர். எல்லா இடங்களிலும் முகாம்கள், உணவுப் பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் நிலைமையை கவனமாக கண்காணித்து வருகின்றனர். டெல்டா மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்கிறார்.

அவர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அவருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *