கோவை – ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏறுதளத்தின் வழியாக மேலே ஏறி வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் இணையும்போது எச்சரிக்கையாக இருக்கா விட்டால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது – வாகன ஓட்டிகள் கருத்து!!

கோவை:
கோவை அவிநாசி சாலை, ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ஏறுதளம் இணையும் இடத்தில் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்குகட்டப்பட்ட, ஜி.டி.நாயுடு மேம்பாலம் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இதில், சிட்ரா அருகே ஏறுதளம், இறங்குதளம், ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் ஏறுதளம், இறங்குதளம், நவஇந்தியா பகுதியில் ஏறுதளம், இறங்குதளம், அண்ணா சிலை அருகே இறங்குதளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

அண்ணாசிலை இறங்குதளம் ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காந்திபுரம் செல்லும் சாலையை இணைக்கிறது. ஹோப்காலேஜ் ஏறுதளம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும், இறங்குதளம் திருச்சி சாலை, விளாங்குறிச்சி சாலையையும் இணைக்கிறது.

நீதிமன்ற வழக்கு காரணமாக அண்ணாசிலை ஏறுதளம் மட்டும் நிலுவையில் உள்ளது. மேம்பாலத்தின் ஏறுதளம் வழியாக மேம்பாலத்தில் இணையும் பகுதி, மேம்பாலத்தில் இருந்து இறங்குளம் வழியாக இறங்கும் பகுதி ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக ரோலர் தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

இம்மேம்பாலத்தின் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள கல்வெட்டின் மீது, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் ராஜகோபுரம் மாதிரி வைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் திறக்கப்பட்டதும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பாலத்தில் பயணித்தனர்.

அவர்கள் கூறியதாவது: அவிநாசி சாலையில் பகல் முழுவதும் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இம்மேம்பாலம் உதவும்.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன. இறங்கு தளம், ஏறுதளங்கள் மேம்பாலத்தில் இணையும் இடங்களில் ரோலர்தடுப்புக் கருவிகள் பொருத்தியது வரவேற்கத்தக்கது.

அதேசமயம், ஏறுதளத்தின் வழியாக மேலே ஏறி வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் இணையும்போது எச்சரிக்கையாக இருக்கா விட்டால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்க எச்சரிக்கை கண்ணாடியை (மிரர்) சுவரில் பொருத்தலாம்.

மேலும், மேம்பாலத்தின் பிரதான ஓடுதளத்தில் ஏறுதளம் இணையும் இடத்துக்கு சிறிது தூரத்துக்கு முன்னர், சிறிய வேகத்தடை அமைக்கலாம்.

அதிவேக வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தவும் இது உதவும். வாகனங்களின் எரிபொருள் சேமிப்போடு, வாகன ஓட்டிகளின் நேர விரயமும் இம்மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *