திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் சுதாகர் பேருந்தை ஓட்டினார். இதில் 60 பேர் பயணித்தனர்.
அதேபோல, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து காரைக்குடிக்கு மற்றொரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் சென்றாயன் பேருந்தை ஓட்டினார். இதில் 57 பேர் பயணித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் நேற்று மாலை இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் மேட்டுப்பாளையம் பேருந்து ஓட்டுநர் பழைய வத்தலக்குண்டு சென்றாயன் (36), சிங்கம்புணரி முத்துமாரி (60), காரைக்குடி மல்லிகா (61), கல்பனா (36), தேவகோட்டை குணலட்சுமி (55), மேலூர் சொக்கலிங்கபுரம் செல்லம் (55), பொன்னமராவதி அம்மன்குறிச்சி தெய்வானை (55) உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 9 பேர் பெண்கள். மேலும், இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து நேரிட்ட இடத்தில் சிவகங்கை ஆட்சியர் கா.பொற்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ஆட்சியர் பொற்கொடி சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து தொடர்பாக நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அதிவேகமாக சென்றதாகவும், மேட்டுப்பாளையத்திலிருந்து வந்த பேருந்தின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், அதனால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
தலைவர்கள் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சிவகங்கை விபத்தில் 11 பேர் உயிரிழந்த தகவலறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.