சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது!!

சென்னை:
சென்னை மற்றும் புறநகரில் ஆட்டோக்களில் இப்போது யாருமே மீட்டர் போடுவது கிடையாது.

ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால், தோராயமாக ஒரு தொகை கேட்பார்கள். பயணிகள் அப்போது பேரம் பேசுவார்கள். இதில் உத்தேசமாக ஒரு தொகையை கேட்டு அதன் பிறகுதான் பயணம் செய்ய முடியும்.

இதுதான் இன்றைய யதார்த்தம். ஓலா, ஊபர், ராபிட்டோ, ஆட்டோ, கார்களில் அந்த அளவுக்கு பேரம் பேசுவதில்லை. ஒரு சிலர் தான் கூடுதலாக 20 ரூபாய் 50 ரூபாய் கேட்பது இப்போது தொடர் கதையாகி வருகிறது.


இது பற்றி ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்கிறார்கள்.

தவறு எங்கள் மீது கிடையாது. அரசு மீதுதான் என்று கூறுகின்றனர். இப்போது ஆட்டோ சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை ‘ஸ்டிரைக்’ அறிவித்து உள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்து உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:-


இன்றைய காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசு கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.

2013-ம் ஆண்டுதான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கி.மீ.க்கு ரூ.12 என்றும் உயர்த்தி நிர்ணயித்தது அன்றைய அரசாங்கம்.

இப்போது விலைவாசி பல மடங்கு ஏறி விட்டது. அன்றைக்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது.

எனவே ஆட்டோ கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று நிர்ணயிக்குமாறு கேட்டு உள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் தாருங்கள் என்கிறோம். அரசு இதில் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.


எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.


எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணாசாலை, தாராபூர் டவர் சாலை, தாராபூர் டவர் ஆகிய இடங்களில் நாளை காலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறோம்.

இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *