ஹெச்.ராஜாவின் மற்றொரு குரலாகத் தான் விஜய், சீமான் பேச்சு வெளிப் படுகிறது – திருமாவளவன் விமர்சனம்!!

சென்னை:
விஜய் மற்றும் சீமானின் பேச்சு ஹெச்.ராஜாவின் மற்றொரு குரலாகவே வெளிப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பெருந்துறை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக தாக்கிப் பேசினார். அதே நேரம் கொள்கை எதிரி என்று அவரால் விமர்சிக்கப்படும் பாஜகவை பட்டும் படாமல் விமர்சனம் செய்தார்.

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தி பெயரால், இத்தனை ஆண்டு காலம் இயங்கி கொண்டு இருந்த, ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பாஜக அரசு தரம் தாழ்ந்து அரசியல் செய்வதற்கு, சான்று இதைவிட வேறு இல்லை. பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் 24-ம் தேதி நாடுமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதில் விசிக பங்கேற்கும். 23-ம் தேதி, இடது சாரி கட்சிகள், விசிக இணைந்து நடத்த இருந்த போராட்டம், 24-ம் தேதி நடக்கும்.

விஜய்யின் ஒவ்வொரு நிகழ்வும், பேச்சும், திமுக வெறுப்பை மட்டுமே மையமாக கொண்டு உள்ளது. நாட்டை பற்றியோ, மக்கள் நலன்கள் பற்றியோ இருப்பதாகத் தெரியவில்லை.

திமுக வெறுப்பை மட்டுமே தனது பரப்புரை கடமையாக கொண்டு அவர் செயல்படுவதை மக்கள் கவனித்து வருகின்றனர். அவரது திட்டம் நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திமுக மீது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லியவர்கள் எல்லாம் மக்களால் புறக்கணிக்கப்பட்டது வரலாறு. ஜெயலலிதா, ஹெச்.ராஜா ஆகியோர் சொன்னதையே பேசுகிறார் விஜய்.

ஹெச்.ராஜாவின் மற்றொரு குரலாகத் தான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *