இறந்தவர்கள் அனைவரும் தேர்தல் நேரத்தில், அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள்; இனி திமுக-வினர் அவர்களை போய் தொந்தரவு செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன் – தமிழிசை கிண்டல்!!

சென்னை:
தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக-வினர், இறந்தவர்களை இனி தொந்தரவு செய்யமாட்டார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. போலி வாக்காளர்கள் அனைவரும் நீக்கப்பட்டிருக்கின்றனர்.

நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். தேர்தல் முடிந்த பிறகு எஸ்ஐஆரை நடத்திக் கொள்ளலாம் எனச் சொன்னீர்களே, அப்படியென்றால், இந்த 97 லட்சம்வாக்காளர்கள் போலி ஜனநாயகத்தையும், போலியான வெற்றியையும் உருவாக்கியிருப்பார்களா இல்லையா? தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது என்றால், அது மக்கள் நலனுக்காகத் தான். 2026-ல் உண்மையான தேர்தல் நடைபெற போகிறது.

அதேபோல், நம்மை ஏமாற்றுபவர்கள், ஏமாந்து போகின்ற தேர்தலாக அது இருக்கும். இதுவரை ஏமாற்றி கொண்டிருந்தவர்களை, இந்த எஸ்ஐஆர் மாற்றிவிட்டது. கொளத்தூரில் அதிகமான போலி வாக்காளர்கள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தோம்.

ஆனால், இன்று அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எஸ்ஐஆரை வரவேற்ற தற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

அதேபோல், எஸ்ஐஆரை எதிர்த்ததற்காக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். எஸ்ஐஆர் மூலம் தூய்மைப்படுத்தப்பட்ட பட்டியல் வரும் போது, அரசியலும் தூய்மைப்படுத்தப்படும்.

இறந்தவர்கள் அனைவரும் தேர்தல் நேரத்தில், அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள். இனி திமுக-வினர் அவர்களை போய் தொந்தரவு செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன்.

தேசிய செயல் தலைவர் சென்னை வருவது மிக்க மகிழ்ச்சி. அதிலும், தமிழகத்தில் கால் பதித்துவிட்டு, புதுச்சேரி செல்வது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பாஜக இன்னும் வலுவாக கால் பதிக்கும் என்பதை இது உணர்த்துகிறது.

தமிழகத்திலும், புதுவையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *