ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோ கத்திற்கு கிளம்புவதாக ஐதீகம்.
மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.
புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருப்பது தையின் சிறப்புகளில் ஒன்று. தை மாதம் சிறப்புடையது என்றால் தையில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் பூச நட்சத்திரம் சிறப்புடையது.
மேலும் தையில் வரும் சப்தமி (ரத சப்தமி) அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) திதியும் சிறப்புடையது. அந்த வகையில் தையில் வரும் அமாவாசை மிக மிகச் சிறப்புடையது. தட்சணாயன காலத்தில் முதல் மாதமான ஆடி மாத அமாவாசை எத்தனை சிறப்புடையதோ, அதே போன்று உத்தராயன காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும் சிறப்புடையது.
பொதுவாக திதிகள் 15 இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் தோஷம் அடையும். ஆனால் அமாவாசை அன்று எந்த கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றி பெறும்.
அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.
ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான நாள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மறைந்த நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் ஒன்று சேர்ந்து தங்களின் சந்ததிகளை பார்க்க பூமிக்கு வருவதாக ஐதீகம். அப்படி பூமிக்கும் வரும் முன்னோர்கள் தங்களின் குடும்பத்தினர் அளிக்கும் தர்ப்பணம், தானம் ஆகியவற்றை ஏற்று தங்களின் பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்வார்கள்.
இதனால் அமைதி அடையும் முன்னோர்களின் ஆத்மாக்கள், தங்களின் சந்ததிகளை மனதார வாழ்த்தும் என நம்பப்படுகிறது. இதனாலேயே அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு, பித்ரு கடன் நிறைவேற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்ற பித்ருகர்ம காரியங்கள் செய்யாதவர்களுக்கு பித்ருதோஷம், பித்ருசாபம் ஏற்படும். இவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக குறிப்பிட்ட சில அமாவாசைகள் சொல்லப்படுகிறது.
அப்படி மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தான் தை அமாவாசை. உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும்.
தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது.
தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும்போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.
அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.
தை அமாவாசை நீத்தார் வழிபாட்டின் பலன்கள் மிக மிக அதிகம். நீத்தார் வழிபாட்டை அமாவாசை அன்று முறையாக நிறைவேற்றினால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கும், சுப காரியத் தடைகள் விலகும், சந்தான விருத்தி ஏற்படும், தொழில் அபிவிருத்தி அடையும், சொத்து சுகங்கள் அதிகரிக்கும், வாகன யோகம் ஏற்படும்.
நோய் நொடிகள் அகலும். அமானுஷ்யமான சக்திகள் அண்டாது. கெட்ட சக்திகள் விலகும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும். இதுவரை செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட கிரக சாபங்கள் நீங்கி, அவை வரங்களாக மாறி வற்றாத நற்பலன்களை அள்ளி அள்ளி வழங்கும்.
பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்தில் இருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர். அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள் ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும்.
நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவ புண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்ற வேண்டும்.