விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கவுரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி, நடிகர் சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
சிறந்த விவசாயி விருது கோவில் பட்டியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கும் சிறந்த வேளாண் பங்களிப்பு விருது மதுரையைச் சேர்ந்த பாமயனுக்கும் சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது வேலூர் மக்கள் நலச்சந்தைக்கும் நீர்நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்புக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய கார்த்தி, ‘‘விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்துக் காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்;
இந்த சமூகத்துக்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த உழவர் விருதுகளை வழங்கி வருகிறோம்” என்றார்.