மதுரை
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே வயலூர் மந்தையில் கருப்புசாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பிரசாத் சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜைகள் முடிந்து நேற்று காலை 9.50 மணியளவில் கடம் புறப்பாடாகி திருக்கோவிலை வலம் வந்து கருவறையில் உள்ள சுவாமி மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தின்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.