சென்னை:
மொரீஷியஸில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூச விழாவில் தமிழ் பக்திப் பாடல்களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன் மக்கள்தொகை 12 லட்சம். இந்திய வம்சாவளியினர் இங்கு அதிகமாக உள்ளனர். குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
அங்கு கரும்புத் தோட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் வலுவான அடித்தளமிட்ட இவர்கள், இந்து சமய அடையாளத்துடன் தைப்பூச விழாக்களையும், தமிழ் மொழியையும் தற்காலத்திலும் சிறப்பாகக் காத்து வருகின்றனர். அரசியலிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
இந்த ஆண்டு வரும் பிப். 1-ம் தேதி தைப்பூச விழா மொரீஷியஸில் நடைபெற உள்ளது. 10 நாள் விரதம், கொடியேற்றம் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் இத்திருவிழாவின் சிறப்பு அம்சங்களாகும்.
இவ்விழா தமிழ் சமூகத்தின் ஒற்றுமையையும், கலாச்சார அடையாளத்தையும் பறைசாற்றும் ஒரு திருவிழாவாக விளங்குகிறது.
இந்த ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட அந்நாட்டு அரசு, தமிழக அரசின் உதவியைக் கேட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் மொரீஷியஸுக்கு 7 பேர் கொண்ட குழுவை நேற்று அரசு அனுப்பிவைத்தது.
இக்குழுவில் வயலின் கலைஞர் மணி சோமசுந்தரம், கீபோர்டு இசைக் கலைஞர் விஜயகுமார் இன்பராஜ், தபேலா மற்றும் மிருதங்கக் கலைஞர் முருகன் ராஜமாணிக்கம், பக்தி பாடகர்கள் சீனிவாசன் துரைசாமி, சுஜாதா, பேட் இசைக் கலைஞர் தியாகராஜன் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆத்தூர் கருணாகரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும், மொரீஷியஸ் முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூச விழாவில் தமிழில் பக்திப் பாடல்களை இசையுடன் பாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.