சென்னை:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடந்த வாரம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த நிலையில், “தவெக கூட்டணிக்கு டிடிவி. தினகரன் வர நினைத்தார்” என தெரிவித்துள்ள தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “நாங்கள் கூட்டணி பேசுகிறோம் என்று தெரிந்தாலே டெல்லியிலிருந்து உடனே வந்துவிடுகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
நேற்று கோவை வந்த கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பலமுனை தாக்குதல் என்பது ஒருவர் மாபெரும் வெற்றியடையப் போகிறார் என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டாகும். எல்லோரும் கூட்டணிக்கு வருவார்கள் என அவர்கள் நினைத்தார்கள்.
நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில், “கொடி பறக்கிறது பார்த்தீர்களா? கூட்டணிக்கு பெரிய கட்சி வருகிறது.
பிள்ளையார் சுழி போட்டாச்சு” எனக்கூறியவர்கள் இவர்கள் தான். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஐடி விங் நிர்வாகிகள் திமுக-வைத்தான் எதிர்க்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு, புதிதாக வந்துள்ள இயக்கத்தை எதிர்க்கின்றனர். இது இதுவரை நடைமுறையில் இல்லாதது ஆகும்.
இதன் மூலம் அதிமுக, திமுக-வின் பி-டீம் என்பது நிரூபணமாகிறது. நான், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பயணம் செய்தவன். என்னை அரசியலுக்கு அடையாளம் காட்டியதே எம்ஜிஆர் தான்.
என் மீது யாராவது ஊழல் குற்றச்சாட்டை சொன்னால் அவர்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தெளிவாக படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லட்டும்.
சிலசமயம், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்குகளைத் தொடர்வார்கள். அப்படித்தான் என் மீதும் வழக்குத் தொடர்ந்தனர்.
ஆனால், நான் குற்றம் செய்யவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. நான் தூய்மையாளன் என நீதிமன்றமே தெரிவித்துள்ளது.
எனவே, என்னைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமை இல்லை. இதுபோல் யாராவது இனி குற்றச்சாட்டு கூறினால் அவர்கள் மீது நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எங்களது கூட்டணிக்கு வராதது ஏமாற்றமாக இல்லை.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலை எடுக்கின்றனர். அதுபோல் அவரும் ஒரு நிலை எடுத்தார். டிடிவி.தினகரன் எங்களது கூட்டணிக்கு வர நினைத்தார்.
ஆனால், சூழ்நிலை காரணமாக அவர் எங்களுடன் வர முடியவில்லை. அவர் எங்கு சென்றாலும் வாழ்க.
நாங்கள் கூட்டணி பேசுகிறோம் என்று தெரிந்தாலே டெல்லியில் இருந்து உடனே வந்து விடுகிறார்கள்.
அதனால் நான் எதுவும் சொல்லாமல் இருப்பது தான் நல்லது. திமுக-வும், அதிமுக-வும் அண்ணாவை மறந்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, தவெக கூட்டணிக்கு ராமதாஸ் தலைமையிலான பாமக அணி வருவதாக தகவல் வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “செய்திகளில் நானும் படித்தேன். நல்லது நடக்கட்டும்” என்றார்.