மும்பை:
மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த் பவார் என்ற மகன்களும் உள்ளனர்.
முன்னதாக, அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து பாரமதிக்கு ஒரு சார்ட்டர்ட் விமானத்தில் (சிறிய ரக விமானம்) பயணப்பட்டார். அவருடன் உதவியாளர்கள் இருவர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், அவர் சென்ற விமானம் இன்று (ஜன.28) காலை சரியாக 8.45 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராமதியில் விமானம் தரையிரங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த அஜித் பவார்? தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் இவர்.
முதன்முதலில் 1991-ல் பாராமதி மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1995, 1999, 2004, 2009, 2014 என தொடர்ச்சியாக அத்தொகுதியை அவர் தக்கவைத்தார்.
2019-ல் அக்கட்சிக்குள் பூசல் ஏற்பட்டபோது தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கான உரிமையை கோரி கட்சி மற்றும் சின்னத்தை தக்கவைத்துக் கொண்டவர்.
அஜித் பவார் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். பல்வேறு அரசுகளின் கீழ் 6 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். மகாராஷ்டிராவில் நீண்ட காலம் துணை முதல்வராக இருந்தவர் அவர்.
அவரது மறைவுக்கு மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களும் தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த துயரத்தை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்து வேதனையளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும், தைரியத்தையும் வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பிரதமர் மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அஜித் பவார் மக்கள் தலைவராக இருந்தார் கட்சியின் அடிமட்டம் வரை வலுவான தொடர்பை கொண்டிருந்தார்.
கடின உழைப்பாளியாகவும், மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்த ஆளுமையாகவும் அவர் மதிக்கப்பட்டார்.
அவரது அகால மறைவு மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த துயர விபத்தை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவு செய்துள்ளார்.