புதுடெல்லி:
வலுவான அடித்தளங்களுடன் நாடு முன்னேறி வருவதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் பலன்கள் 95 கோடி இந்திய குடிமக்களுக்கு கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், ‘‘நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத்தொடரில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவுக்கு விரைவான முன்னேற்றத்தை அளித்த மறக்க முடியாத ஆண்டாக கடந்த ஆண்டு இருந்தது.
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பாடலை எழுதிய பக்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு, நாட்டுமக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது. அதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350-வது தியாக தினத்தை அரசு நினைவுகூர்ந்து விழா எடுத்தது. இதேபோல், பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளில் நாடு அவருக்கு அஞ்சலி செலுத்தியது.
பழங்குடி சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாடு நினைவு கூர்ந்தது. சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தொடர்பான நிகழ்வுகள், ஒரே நாடு உன்னத நாடு என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.
பாரத ரத்னா பூபன் ஹசாரிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாட்டை எவ்வாறு இசையாலும் ஒற்றுமை உணர்வாலும் நிரப்பின என்பதை முழு நாடும் கண்டது.
நாடு தனது முன்னோர்களை நினைவுகூரும்போது, புதிய தலைமுறைக்கு உத்வேகம் கிடைக்கிறது. இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை மேலும் வேகப்படுத்துகிறது.
இந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள், இந்தியாவுக்கு பல வெற்றிகள், பெருமைக்குரிய சாதனைகள், அசாதாரண அனுபவங்கள் ஆகியவற்றால் நிறைந்ததாக இருந்துள்ளது.
கடந்த 10-11 ஆண்டுகளில், இந்தியா ஒவ்வொரு துறையிலும் தனது அடித்தளத்தை வலுப்படுத்தி உள்ளது.
நாட்டில் சமூக நீதி நிலைநாட்டப்பட அரசு உறுதிபூண்டுள்ளது. மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் பலன்கள் இப்போது ஏறத்தாழ 95 கோடி இந்திய குடிமக்களுக்குக் கிடைக்கின்றன.
மத்திய அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. இந்தியாவில் தற்போது 150 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன’’ என தெரிவித்தார்.