கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு!!

கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம் (Search Engine Technology), கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) அமெரிக்க பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ளது.

இந்நிலையில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் சந்தித்த போது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதித்தார்.

மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் ஆகியவற்றில் AI கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *