சென்னை:
மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் கட்சிகள் வரவேற்றும் விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சர் எல்.முருகன்:
ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம், பொதிகை மலையேற்ற சுற்றுலா திட்டம் என பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற லட்சியத்தை அடைவதற்கான உறுதியான பாதையை வகுக்கும் வகையிலும் பட்ஜெட் அமைந்துள்ளது.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு தெளிவான அறிவிப்புகள் இல்லை.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் தமிழகத்துக்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: சென்னை- ஹைதராபாத்- பெங்களூரு நகரங்களை இணைத்து அதிவேக ரயில் வழித்தடச் சேவையை அறிவித்துள்ளதற்காக தமிழக மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேநேரத்தில் வரி வருவாயில் 41 சதவீதம் மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அரிய வகை கனிமங்கள் எடுக்க வழித்தடம், அதிவேக ரயில் வழித்தடம், பொதிகை மலையேற்ற சுற்றுலா வழித்தடம் ஆகியவை தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
டிடிவி தினகரன் (அமமுக பொதுச் செயலாளர்): பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில், இந்தியாவின் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து 9வது ஆண்டாக தாக்கல் செய்திருப்பதோடு, அதிக முறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இந்தியாவின் இலக்கை எளிதாக எட்டிப்பிடிப்பதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக பட்ஜெட் அமைந்திருப்பது வரவேற்புக்குரியது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: ஆதிச்சநல்லூர் உட்பட நாட்டின் 15 தொல்லியல் இடங்களை கலாச்சார மையங்களாக மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் செழிப்பான நாகரிகத்தை உலகுக்கே நாம் பறைசாற்ற முடியும்.
திமுக எம்.பி. கனிமொழி: தமிழகத்தின் அடிப்படை வளங்களை சுரண்டும் பட்ஜெட். தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான திட்டங்களும் இல்லை, திருக்குறளும் இல்லை. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. உருப்படியான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லாத மக்கள் விரோத பட்ஜெட்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: விவசாயிகள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, பெருநிறுவனங்களுக்கு சாதகமான பட்ஜெட்டாக ஏமாற்றம் அளிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: இந்த பட்ஜெட், எரியும் பொருளாதார பிரச்னைகள் எதற்குமே தீர்வு காண்பதாக அமையவில்லை.
எளிய நடுத்தர மக்களின் நலனுக்கோ, சிறு தொழில்களை நெருக்கடியிலிருந்து மீட்கவோ, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கோ இந்த நிதிநிலை அறிக்கை உருப்படியான முன்மொழிவுகள் எதையும் உள்ளடக்கியதாக இல்லை.
எந்த வகையிலும் தேசத்தின் நலனுக்கோ, மக்களின் வாழ்வுக்கோ, தமிழகத்தின் உரிமைக்கோ உதவாத இந்த பட்ஜெட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இல்லை. நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடும் இல்லை.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழகத்துக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை. தேர்தலுக்காகக்கூட எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்துக்குள்ளாக எந்த ரயில்வே திட்டமும் இல்லை.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: நதிகள் இணைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தங்கம்- வெள்ளி விலையை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்போ இல்லை.
மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன்: ‘பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம். பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி’ என கவிஞர் கண்ணதாசன் பாடியிருப்பார். எந்த பட்ஜெட் என்றாலும் இந்த வரிகள் பொருந்தும் போலிருக்கிறது.
தமிழக பாஜக நிர்வாகி ஆர்.சரத்குமார்: மத்திய பட்ஜெட், தொலைநோக்கு செயல்திட்டத்துடன் இந்தியாவின் சுயசார்பை ஊக்குவித்து, ஏற்றுமதி – இறக்குமதி துறைகளில் நிலைத்தன்மையை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவை முதன்மை நிலைக்கு கொண்டு செல்லும் சிறப்பான அறிவிப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பெருமளவு விவசாயிகள் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களை ஊக்கப்படுத்துவதற்கான எந்த ஒரு அடிப்படைத் திட்டத்துக்கும் நிதி ஆதாரம் ஒதுக்கப்படவில்லை.
மனித நேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி: இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான உரிய திட்டங்கள் ஏதுவும் இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்: எதிர்பார்த்த வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல் வரவு, செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டிருக்கிற தங்கம்,வெள்ளி விலையை குறைக்க நடவடிக்கை இல்லை.