சென்னை:
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான எந்த முக்கிய திட்டங்களும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது மத்திய பாஜக அரசின் கண்களுக்கு தமிழகம் தெரியும்.
அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பை பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
மத்திய நிதி அமைச்சர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தின் நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள்- பெண்கள்- விவசாயிகள்- விளிம்பு நிலை மக்கள் என எந்த பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கிய திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழகம் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற கருத்தை, நாம் வலுவாக முன்வைத்து வருகிறோம்.
மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கை இம்முறையும் புறக்கணிக்கப்பட்டு, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் நலன் குறித்த திட்டங்கள் இடம்பெறும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், புதிய திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை.
மும்மொழி கொள்கையை கடைப்பிடிக்காததன் காரணமாக அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான ரூ.3,548 கோடி, ஜல் ஜீவன் திட்டத்தை நாட்டிலேயே நாம் சிறப்பாக செயல்படுத்திய போதிலும் மத்திய அரசு இன்னும் விடுவிக்காத நிதி ரூ.3,112 கோடி நிதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
இதுமட்டுமின்றி தமிழகத்துக்கு என புதிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.
வழக்கமாக மத்திய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் திருக்குறளும் இந்த முறை இடம்பெறவில்லை. தமிழகத்துக்கான எந்த முக்கிய திட்டங்களும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஏமாற்றம். ஏமாற்றம். ஏமாற்றம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.