திமுகவை நக்கலடித்த தவெக தலைவர் விஜய் !!

சென்னை:
டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் தீயசக்தி பற்றி, ‘அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என்று குறள் எழுதியிருப்பார் என தவெக தலைவர் விஜய் நக்கலடித்துள்ளார்.

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தவெகவின் கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார், பின்னர் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பாடகர் வேல்முருகனின் இசை கச்சேரியில் விஜய் உற்சாகமாக நடனமாடினார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விசில் அடித்து கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:
நமது கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா. இன்று தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறோம் என்றால், அதற்கு தொண்டர்களும், மக்களும் தான் மிக முக்கிய காரணம்.

எம்ஜிஆர் ஒரு பேட்டியில் அண்ணாதுரை இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டதை நினைத்து எண்ணி, எண்ணி கண்ணீர் வடித்தேன் என்றும் அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் அதிமுக எனவும் கூறினார்.

அதே மாதிரி 2017, 2021-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் நிலைமையை யோசித்து பார்த்த மக்கள், காமராஜர் , அண்ணா , எம்ஜிஆர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டது என்று கண்ணீர் வடித்தார்கள்.

இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் தமிழக வெற்றிக் கழகம். எம்ஜிஆருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

காமராஜருக்கு இலக்கியம் தெரியுமா? என்று கொந்தளித்தனர். இன்று நம்மைப் பார்த்துக் கொந்தளிக்கின்றனர். அரசியலில் யார் அவர்களை எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை.

இத்தனையையும் மீறி தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக தவெக இன்று வளர்ந்திருக்கிறது. அதனால், டெக்னாலஜி வளர்ந்திருக்கும் சூழலில் விமர்சனங்களில் உங்கள் (திமுக) டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.

அதைவிடுத்து 50 வருடங்களுக்கு முந்தைய தகர டப்பாவை எடுத்து உருட்டுகிறார்கள். ‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்.

ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம்.

டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் தீயசக்தி பற்றி, ‘அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என்று குறள் எழுதியிருப்பார்.

மும்முனைப் போட்டி, நான்குமுனைப் போட்டியில் மாபெரும் மக்கள் சக்தியாக நம் அணி ஒருபக்கம், திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம், பாஜக தலைமையில் மற்றும் பலர்.

இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டுமே முடியும். ‘ஏய்.. விஜய் வீட்டை விட்டு வெளியே வா’ என்று சொல்கின்றனர், ஓட்டு போடும் அன்றைக்கு ஒவ்வொரு வீட்டில் இருக்கும் விஜய்யும், விஜியும் பூத் பூத்தாக காலையில் வந்து நிற்பார்கள். அன்றைக்கு பாருங்கள், ஏன் இந்த விஜய்யை கூப்பிட்டோம் என்று தெரியும்.

இப்போது கருத்துக் கணிப்பு என்று ஒன்று போய் கொண்டு இருக்கிறது. சிலர் கடுப்பில் விட்ட கருத்துக் கணிப்பும் இருக்கிறது.

கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு நான் சொல்வது, ஒவ்வொரு ஊர் ஊராக, வீடு வீடாக நீங்கள் கருத்துக் கணிப்பு எடுத்து பாருங்கள் ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதிர்ச்சியாக இருந்தால் திரும்ப கருத்துக் கணிப்பு எடுங்கள். அதே ரிசல்ட் தான் வரும்.

நமது சி.எம். சார் (முதல்வர் ஸ்டாலின்) 2 ஆண்டுகளுக்கு முன் மேடையில் பேசும்போது எனது கட்சியினர் மந்திரிகள் செய்யும் அடாவடியைப் பார்த்து ராத்திரி தூக்கம் வரவில்லை என்றார்.

அவர் என்றாவது அசந்து தூங்கும்போது, அவரிடம் போய் ‘எந்த சின்னத்துக்கு ஓட்டு போடுவீர்கள்’ என்று கேட்டு பாருங்கள், ‘விசில் சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவேன்’ என்று சொல்வார்.

நான் ஓவர் கான்ஃபிடன்சில் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள். கள நிலவரம், கள யதார்த்தமும் இதுதான். தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் தான் முடியும்.

2026 தேர்தலில் மக்களுக்கு ஒரே வாய்ப்பு தவெக தான். இந்த டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின், எவ்வளவு இன்ஜின் வந்தாலும், டாப் இன்ஜின் நம்ம தவெக தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *