திருப்பூர்:
சைவம், அசைவம் என எந்த வகை உணவுகள் தயாரித்தாலும் முதன்மை இடத்தை தக்காளிகள் பெறுகின்றன. இதனால் தக்காளியின் தேவை எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.
இதைக்கருத்தில் கொண்டு தக்காளி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சில நேரங்களில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. மேலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு சாலையோரங்களில் வீசும் அவலமும் ஏற்பட்டு வந்தது.
தற்போது திருப்பூரில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வீதிகளில் வீசப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூரை பொறுத்தவரை தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தரத்துக்கு ஏற்ப 5 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி அழுகி விடுகின்றன.
விலை வீழ்ச்சியை சந்தித்ததால் அந்த தக்காளிகளை கூடை, கூடையாக மார்க்கெட் அருகே உள்ள ஜம்மனை ஓடையில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். இன்னும் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.