சேலம்:
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

நமோ யூத் பவுண்டேஷன், பாஜக விளையாட்டுப் பிரிவு சார்பில் சேலத்தில் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்த நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மலேசியாவில் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருந்தாலும், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் அதிக பங்களிப்பை அளித்து வருகிறார்கள் என்று பெருமைப்படுத்தி பேசியுள்ளார்.
தமிழையும், தமிழின் பெருமையையும் பிரதமர் மோடி தொடர்ந்து உலக அரங்கில் எடுத்துக் கூறி வருகிறார்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் பிரதமர் மோடி ஒன்றுமே செய்யவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
மதுரையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
ஏற்கெனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாநாடுபோல நடந்தது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் மனதிலும் மாற்றம் வந்திருக்கிறது. எனவே, ஆட்சி மாறப்போவது நிச்சயம்.
பாஜகவுக்கு ஆதரவு தரக்கூடிய அமைப்புகள், சமுதாய அமைப்புகளிடம் பேச மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளன. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, திமுகவினர் இந்திராகாந்தி உள்ளிட்ட பெண்களை இழிவுபடுத்திப் பேசினர்.
பின்னர் திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதேபோல, தற்போதும் திமுகவினர் பேசி வருவதால், திமுக இனி ஆட்சிக்கு வராது.
தேர்தல் நெருங்கும் சூழலில், அவசரகதியில் கோயில்களுக்கு கும்பாபிஷேகங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், விளையாட்டுப் பிரிவுத் மாநில தலைவர் நயினார் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.