யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

சென்னை,

யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற்ற அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி சங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி இணைந்து நடத்திய நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

பள்ளி முடித்துவிட்டு பணம் இல்லாத காரணத்தால், கல்லூரிக்கு போகாமல் வீட்டிலேயே பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த பலர், இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதன் காரணத்தினால், மறுபடியும் படிப்பதற்கு வந்திருக்கி றார்கள்.

சமீபத்தில் எடுத்த டேட்டா அடிப்படையில், புதுமைப்பெண் திட்டத்தால் மட்டும் பெண்கள் உயர்கல்வியில் சேருவது கூடுதலாக 34 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இப்போது மறுபடியும் ஆய்வு செய்தால் இந்த சதவிகிதம் கண்டிப்பாக இன்னும் கூடியிருக்கும்! இது போன்று சுமார் 8 இலட்சம் மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள்.

அடுத்து, கடந்த ஆட்சியில் மருத்துவப் படிப்பில் மட்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். ஆனால், நாம்தான் அதற்காக தொடர் போராட்டம் நடத்தி, அதை கொண்டுவர வைத்தோம்! இப்போது, நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, என்ஜினீயரிங், விவசாயம், சட்டம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு

இடஒதுக்கீட்டை கொண்டு வந்தோம்! இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாவற்றையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தோம்!

கடந்த 5 ஆண்டுகளில், 40 ஆயிரத்து 613 மாணவர்களுக்கு 911 கோடி ரூபாய் இதற்காக செலவிடப்பட்டிருக்கிறது.

பள்ளிக் கல்வியை எடுத்துக் கொண்டால், காலை உணவுத் திட்டத்தில் 19 லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள், தினமும் காலையில் சூடான, சுவையான உணவை சாப்பிட்டு தெம்பாக படிக்க வருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளிலிருந்து தேர்வான ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்றுகொண்டு இருக்கிறது.

வெற்றிக்கு ’ஷார்ட்-கட்’ கிடையாது! Hard Work செய்தால்தான் ஜெயிக்க முடியும்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக் ஒன்று வரும். “கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது! கஷ்டப்படாமல் கிடைப்பது நிலைக்காது!”

இன்றைக்கு நீங்கள் எந்தத் துறையில் இருக்கும் சாதனையாளர்களை எடுத்து கொண்டாலும், எல்லோருக்குமே ஒரு பெரிய ‘Journey’ இருக்கும்! அதில் நீங்கள் போடக்கூடிய Efforts, அந்த ‘Process’-இல் நீங்கள் கற்றுக்கொள்ளும் Lessons, இதெல்லாம்தான் உங்களை பக்குவப்படுத்தும்! பக்குவத்துடன் அடையும் வெற்றிதான் நிலைத்து நிற்கும்!

என்னைப் பொறுத்தவரையில், பெண்கள் என்றாலே அழகுதான்! அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு! படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகத்திலேயே அழகான அணிகலன்!

இன்றைக்கு இருக்கும் போட்டி நிறைந்த உலகத்தில் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், சும்மா ஒரு டிகிரி படித்தால் போதாது! நீங்கள் வேலைக்கு சென்றாலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கும் துறையில், ஆராய்ச்சிப் படிப்பு வரை தொடர்ந்து படிக்க வேண்டும்! இது உங்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல, நம்முடைய மாநிலம் முன்னேறவும்தான் சொல்கிறேன்.

இன்னைக்கு தமிழ்நாடு நம்பர்-1 மாநிலமாக இருக்கிறது. ஆனால், வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்றால், 1950-களில் அப்படியே தலைகீழான நிலைதான் இருந்தது. நாட்டிலேயே வறுமையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு, இப்போது நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலமாக வளர்ந்திருக்கிறது; இன்னும் பெருமையோடு சொல்கிறேன் – இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறோம்!

நிறைய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டைத் தேடி வருகிறார்கள். கடந்த 6 மாதத்தில் பார்த்தீர்கள் என்றால், வின்ஃபாஸ்ட், டாடா மோட்டார்ஸ் – ஜாகுவார் லேண்ட்ரோவர் என இரண்டு பெரிய கார் உற்பத்தி ஆலைகளை திறந்து வைத்திருக்கிறேன். இதற்கு முன்பு இவ்வளவு குறைந்த காலத்தில் 2 பெரிய கார் நிறுவனங்கள் திறந்து வைத்த வரலாறே இல்லை! ஆனால், நாம் செய்து இருக்கிறோம்!

அடுத்து, ஃபோர்டு கம்பெனியும் மீண்டும் உற்பத்தியை தொடங்கப் போகிறார்கள். மற்ற மாநிலங்கள் கூட போட்டி என்ற நிலையை தாண்டி, உலக நாடுகள் கூடதான் நாம் இப்போது போட்டி போடுகிறோம்! இதற்கெல்லாம் காரணம், கல்வியில் தமிழ்நாடு செலுத்தும் கவனம்தான்!

இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலமாக, யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இது இன்னும் உயர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் வேலைக்குச் செல்லக்கூடிய நிலைமை வர வேண்டும். அதற்கு உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சொல்லுங்கள் – நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்! நிச்சயம் உங்கள் வளர்ச்சியில் நான் உங்களுடன் இருப்பேன். அதேபோல், உங்கள் ‘ஹெல்த்’தையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது கூட 14 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம்! இந்தியாவில் எங்கும் இது கிடையாது! நாம்தான் ஃபர்ஸ்ட்! வெளியில் சென்று போட்டுக் கொண்டால், 14 ஆயிரம் ரூபாய் ஆகும், இந்த தடுப்பூசியை அரசே கட்டணமில்லாமல் இப்போது செலுத்துகிறோம். இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடம் எடுத்து சொல்லுங்கள். நீங்களும் எனக்கு மகள்கள் போல்தான். அந்த பாசத்துடன் உலகம் முழுவதும் நீங்கள் வலம் வர வேண்டும் என்று அக்கறையுடன் சொன்னதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் எல்லோரும் நன்றாகப் படித்து, வாழ்க்கையில் முன்னேறினால், அதுதான் நீங்கள் எனக்கு செலுத்தக்கூடிய உண்மையான நன்றி!

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், இனிகோ இருதயராஜ், பரந்தாமன், சென்னை மாநகரத்தின் மண்டல குழுவின் தலைவர் சிற்றரசு, கிறிஸ்தவ உயர்கல்வி சங்க பொதுச் செயலாளர் சேவியர் வேதம், கல்லூரி முதல்வர் டாக்டர் லில்லியன் ஜாஸ்பர், ஏசு சபையின் அருட்தந்தை தாமஸ் அமிர்தம், சென்னை கிறித்துவக் கல்லூரி முதல்வர் பால்வில்சன், மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி சங்கத் தலைவர் மோகன்எட்டி, முதல்வர்கள் அஸ்ரர் செரீப், பால்ஜெயகர், ஸ்டெல்லா மேரி, லூயிஸ் ஆரோக்கியராஜ், பியுலா ஜெயஸ்ரீ, அம்துல் அஜீஸ், ஜார்ஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *