சென்னை:
‘டாஸ்மாக்கில் பணியாற்றும் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள், ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வாங்கினாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை’ என முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டி உள்ளார்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று சென்னையில் பேரணி நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, சிந்தாரிப்பேட்டையில் தொடங்கி எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
மாதம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம்:
அரசு டாஸ்மாக் கடைகளை குறைப்பதாகக் கூறிவிட்டு, தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக ஊருக்கு ஊர் 10-க்கும் மேற்பட்ட எஃப்.எல்.2 உரிமங்களை வாரி வழங்கிவிட்டனர்.
டாஸ்மாக் மூலம் அரசுக்கு மாதம் ரூ.5,000 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனாலும், அந்த வருமானத்தை ஈட்டித் தரும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுக்கிறது.
நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில், காலி பாட்டில்களை ஊழியர்களே திரும்பப்பெற வேண்டும் என நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. மிகக் குறுகிய இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில், காலி பாட்டில்களைச் சேமித்து வைக்க இடவசதி இல்லை.
இதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டால் ஊழியர்களுக்குத் தொற்றுநோய்கள் பரவுகின்றன. எனவே, காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கு தனியாக குடோன் வசதி செய்து தரப்பட வேண்டும்.
பாரபட்ச நடவடிக்கை: திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வாங்கினாலும் நடவடிக்கை இல்லை. ஆனால், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிறு தவறு செய்தால்கூட உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
வரும் தேர்தலில் பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார். அப்போது டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.