நெற்றிக்கண்ணுடன் அம்பாள் அருள்பாலிக்கும் தலம் தான் வளையாத்தூரில் உள்ள வளவ நாதீஸ்வரர் கோவில் – தல வரலாறு!!

மும்மூர்த்திகளில் ஒருவராகவும், அழிக்கும் தெய்வமாகவும் கருதப்படுபவர், சிவபெருமான்.

இவரது தனி அடையாளங்களில் ஒன்றாக, மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக்கண் உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே சிவபெருமான், முக்கண்ணன், நெற்றிக்கண்ணன், திரிநேத்ரன் என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் நெற்றிக்கண் உடையான் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் சிவபெருமானை போன்று நெற்றிக் கண்ணுடன் அம்பாள் காட்சி தருவதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி நெற்றிக்கண்ணுடன் அம்பாள் அருள்பாலிக்கும் தலம்தான், ராணிப்பேட்டை மாவட்டம் வளையாத்தூரில் உள்ள வளவநாதீஸ்வரர் கோவில். இத்தல இறைவன் ‘வளவ நாதீஸ்வரர்’ என்றும், இறைவி ‘பெரியநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

தல வரலாறு

முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மன்னன், தீவிர சிவ பக்தனாக இருந்தான்.

தன் நாட்டில் விவசாயம் செழிக்கவும், மக்கள் சிறப்பாக வாழவும் வேண்டி, சிவபெருமானுக்கு கோவில் கட்ட எண்ணினான். ஆனால் அவனுக்கு எங்கு கோவில் கட்ட வேண்டும் என்று தெரியவில்லை.

ஒரு நாள் மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், இந்த இடத்தை குறிப்பால் உணர்த்தி உள்ளார். இதையடுத்து, மன்னன் இங்கு கோவில் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இத்தல இறைவன் அருளால் இப்பகுதியில் விவசாயம் செழித்து, மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் இவருக்கு ‘வளவநாதீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

இறைவன், பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து அருள்பாலிப்பதால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

கோவில் அமைப்பு

இக்கோவிலுக்கு பல்லவ, சோழ, நாயக்க, விஜய நகரப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவிலில் நுழைந்ததும், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோல த்தில் காட்சி தரும் பெரியநாயகி அம்பாளை தரிசிக்கலாம்.

சிவனுக்கு இருப்பது போன்று, அம்பாளின் நெற்றியில் நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் கண்களாக கொண்டவர்.

சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதை உணர்த்தும் வகையில், இக்கோவிலில் அம்பிகை நெற்றிக் கண்ணுடன் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.


அம்பிகையின் நான்கு திருக்கரங்களிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது விசேஷமாகும். இந்த அன்னை மாங்கல்ய வரப்பிரசாதியாக திகழ்கிறார்.

எனவே, இவரை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அன்னையை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இரவில் பூஜை செய்கிறார்கள். இது, வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறை ஆகும்.

இறைவன், வளவநாதீஸ்வரர் என்ற நாமத்தில் சதுர வடிவ பீடத்தில் காணப்படுகிறார். இவர், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில் நவாம்ச மூர்த்தியாக காட்சி தருவதாக ஐதீகம்.

இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களை குறிப்பதாக சொல்வர். எனவே, எந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் தோஷ நிவர்த்தி பெறும் தலமாக இக்கோவில் உள்ளது.

சிவன் சன்னிதி முன்பாக விநாயகர் மற்றும் வள்ளி-தெய்வானையுடன் முருகன் சன்னிதிகள் உள்ளன. தனது கையில் சிவனுக்குரிய சின் முத்திரையை காட்டியபடி இங்குள்ள முருகன் அருள்பாலிப்பது விசேஷமாகும்.

மேலும், சப்தகன்னியர் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பாகும். கோவில் தல விருட்சமாக வன்னி மரமும், தல தீர்த்தமாக சிவ தீர்த்தமும் உள்ளன.

இந்த ஆலயத்தில் சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று, கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

அமைவிடம்

வேலூர் – சென்னை செல்லும் வழியில் சுமார் 24 கி.மீ. தொலைவில் ஆற்காடு உள்ளது.

அங்கிருந்து 19 கி.மீ. தூரம் பயணித்தால் இக்கோவிலை அடையலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *