ஆட்சியில் பங்கு எனும் வாதம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது – ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு!!

சென்னை:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே திமுக கூட்டணியில் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்துவருகின்றன.

தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைப்பதில் திமுக தாமதம் செய்து வருவதாக காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளில் சில அதிருப்தி தெரிவித்திருந்தன.

இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அறிவிக்காதது எங்கள் தொண்டர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது’’ என்று கூறியதும் விவகாரம் மீண்டும் சர்ச்சையானது.

இதையடுத்து, திமுக தலைமை உடனடியாக இரவோடு இரவாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், ‘விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல் முடிந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்’ என்று கூறப்பட்டது.

இதன்மூலம் ஏற்கெனவே திட்டமிட்டபடி பிப்ரவரி மாத இறுதியில் தான் பேச்சுவார்த்தையே தொடங்குவோம் என்பதை திமுக தெளிவுபடுத்திவிட்டது.

மறுபுறம், குழு அமைக்காமல் இந்த விவகாரத்தை சாமர்த்தியமாக திமுக கையாண்ட விதம் காங்கிரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் முதல்முறையாக ‘ஆட்சியில் பங்கு’ விவகாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது மவுனத்தை நேற்று கலைத்தார்.

சென்னையில் ஆங்கில ஊடகம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம், ‘ஆட்சியில் பங்கு’ குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘‘ஆட்சியில் பங்கு எனும் வாதம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது. இது காங்கிரஸ் உட்பட கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் தெரியும்.

கூட்டணிக்குள் ஒரு சலசலப்பை உருவாக்குவதற்கான முயற்சியே இது. திமுக கூட்டணியில் எவ்விதமான சிக்கலும் இல்லை. காங்கிரசுடன் கூட்டணி அமைத்துத்தான் திமுக தேர்தலை சந்திக்கும்’’ என்று கூறினார்.

இந்த அறிவிப்பால் கூட்டணி ஆட்சிக்கு திமுக தயாரில்லை என்பது உறுதியாகிவிட்டது. முதல்வரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து பலர் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்விவரம் வருமாறு:

காங்கிரஸ், நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி:

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தமிழகம் மட்டும் ஏன் தனித்துவம் என்ற போலி பிம்பத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களை போல் கூட்டணி அரசு அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. மேலும், ஜார்கண்ட், கேரளா, பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸ் மக்களவைக் கொறடா மாணிக்கம் தாகூர்: கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: முதல்வர் அவரின் கருத்தை கூறியுள்ளார். எங்கள் தேசிய தலைவர்களும், முதல்வரும் அமர்ந்து பேசி நல்ல முடிவை எடுப்பார்கள்.

கூட்டணியில் விரிசல் வருமா என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஒருபோதும் பாஜக, அதன் அங்கமாக உள்ள அதிமுக-வை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒருஅறிவிப்பும் இல்லை. எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கிறது.

எனவே, அவர் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். தேர்தல் பேச்சுவார்த்தையை தேசிய தலைமைதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி சலசலப்பு தொடர்கதையாகி வருவது அந்த கட்சிகளின் தொண்டர்களிடையே வார்த்தை மோதலுக்கும் வழிவகுத்துள்ளது.

இவ்விரு கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலமாக தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *