சுரங்க விவகாரத்தில்; தமிழக திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது – எல்.முருகன்….

புதுச்சேரி:

புதுச்சேரி பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடந்த சர்வதேச உளவியல் மாநாடை தொடங்கி வைத்த மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், அம்பலக்காரர்கள், மத்திய கனிமவளத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்தனர். அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வருவதால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய விவசாய பாதிப்பு பிற பாதிப்புகளை விளக்கி கூறினர்.

இதனடிப்படையில் பிரதமர் மோடியுடன் ஆலோசித்து, மத்திய மந்திரி கிஷன்ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார். இதற்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி கிஷன்ரெட்டிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

சுரங்க விவகாரத்தில் தமிழக திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது. 2017-ம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நடந்து வருகிறது.

இது கடந்த 2023-ம் ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பொய்யான தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு பரப்பி வந்தது. 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் இத்திட்டம் தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை. மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக தி.மு.க. அரசு காட்டிக்கொண்டது.

பிரதமர் மோடி உலகம் முழுவதும் திருக்குறளை பரப்பி வருகிறார். தேர்தல் அறிக்கையில் உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 5 நாடுகளில் திருக்குறள் கலாச்சார மையத்தை உருவாக்கியுள்ளோம்.

டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என தமிழ் பற்றாளர்கள், சான்றாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான தேதியை விரைவில் அறிவித்து டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *