சென்னை:
‘மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வருவாய்களை பெருக்குவதுடன், பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

‘டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அரசு பணிக்கும் ஆசிரியர் பணிக்கும் தேர்வுசெய்யப்பட்டுள்ள 9,801 பேருக்கு பணிநிய மன ஆணை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்வர் பேசியதாவது: பல தடைகளை, சூழ்ச்சிகளை முறியடித்து 1. 31 கோடி சகோதரிகளுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்குமான முதல்வராக இருந்து தமிழகத்தை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக உயர்த்தும் பொறுப்புணர்வு கூடியிருக்கிறது. நமது நிர்வாகம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வருவாய்களை பெருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் எழுச்சியால் படிப்பை இறுகப்பிடித்து இளைஞர்கள் முன்னேறியுள்ளனர்.
உங்கள் கையில் இருக்கின்ற பணிநியமன ஆணை என்பது, உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எதிர்காலத்துக்கான உத்தரவாதம். ஒரு கிராம நிர்வாக அலுவலர் சரியாக பணியாற்றினால், அந்த கிராமமே மாற்றத்தைக் காணும்.
ஒரு ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றினால், அறிவார்ந்த – ஒழுக்கம் மிகுந்த தலைமுறை உருவாகும், ஒரு மருத்துவர் கடமையுணர்வுடன் பணியாற்றும்போது, ஒரு உயிர்காப்பாற்றப்பட்டு, அவர்கள் குடும்பமே மகிழ்ச்சிக்குள்ளாகிறது.
அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நீங்கள் சார்ந்த துறை மூலமாக, தமிழக மக்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்த வேண்டும். மகளிர் உரிமைத் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட முன்னோடித் திட்டங்கள் அரசுக்கு நல்ல பெயரை கொடுத்திருக்கின்றன.
அதற்கு காரணம், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். திட்டங்களைத் தீட்டி சட்டங்களை இயற்றி பட்ஜெட் போட்டு நிதி ஒதுக்குகிறோம். இவற்றின் பலன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைப்பது அரசு ஊழியர்களிடம் தான் இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகாலத்தில், 1 லட்சத்து 55,131 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்காக, வளமான தமிழகத்தின் எதிர்காலத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
கடமையை மனசாட்சியுடன் செய்யுங்கள். நீங்கள் நேர்மையாக இருந்தால், அது அரசின் நேர்மைத் தன்மையை வெளிப்படுத்தும். காலம் தவறாமல், கடமை உணர்வோடு மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியவர்களாக, மக்களுக்கு பரிவு காட்டக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மேலும் இந்நிகழ்வில், ஷெனாய் நகரில் ரூ.62.50 கோடியில் கட்டப்பட உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தேர்வுக்களம்’ செயலியையும், அரசு ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஆன்லைனில் இலவசமாக பயிற்சி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தையும் (https://thiran360.tn.gov.in/) முதல்வர் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், என்.கயல்விழி செல்வராஜ், பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்தரமோகன், சுகாதாரத் துறை செயலர் பி.செந்தில்குமார், மனிதவள மேலாண்மைத்துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.