திருச்சி;
முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்ப்பதற்கு தோல்வி பயமே காரணம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்ஐஆர்) குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
எஸ்ஐஆர் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்ப்பதன் பின்னணி என்ன? தோல்வி பயமே காரணம்.
பிஹார் தேர்தலில் தேஜகூ ஆட்சி மீண்டும் மலர்ந்து நல்லாட்சி தொடர பிரகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத அரசாக திணறி வருகிறது தமிழக அரசு.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. திமுகவின் அதிகாரவர்க்கத்துக்கு பயந்தே எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்றுள்ளன. பிஹாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தான் கூறுகின்றனர்; தேர்தல் ஆணையம் கூறவில்லை.
தோல்வி பயத்தில்தான் தேர்தல் ஆணையத்தின் மீது இண்டியா கூட்டணி இப்படியான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். தாங்கள் வென்ற மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தை தூக்கிவைத்துக் கொண்டு ஆடுவார்கள், தோற்ற… தோற்கப் போவதாக கருதும் மாநிலங்களில் ஆணையத்தை குறை கூறுவார்கள் என்றால் அவர்கள் கூற்றை யாரும் நம்பத் தயாராக இல்லை.
தமிழகத்தில் பாஜக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் இணைந்து தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் வெற்றி பெறும் சூழலை ஏற்படுத்தி வருகின்றன.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை மக்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனர். அதனால் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் அதிகரிக்கின்றன.
அதனால் இயல்பாகவே எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதத்தில், திமுகவை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணியில் ஓரணியாய் இணைந்து ஒத்த கருத்துடன் இலக்கை 100 சதவீதம் அடைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.