ஓபிஎஸ்ஸுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் அனாதையாக நிற்கிறார் – செல்லூர் ராஜு கருத்து!!

மதுரை:
“ஓபிஎஸ்ஸுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் அனாதையாக நிற்கிறார். அவருடன் இருந்தவர்ளெல்லாம் இங்கே வந்துவிட்டார்கள்” என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ‘‘அதிமுக வாக்குகள் பிளவுப்படவில்லை. ஆளும்கட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.

வீட்டுக்கு அனுப்புவதற்கு ஒரே தகுதியான தலைவராக பழனிசாமி உள்ளார். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக எழுச்சி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் எத்தனை முகம் வந்தாலும் அத்தனை முகமும் அடிப்பட்டுவிடும். களத்தில் நின்று பழனிசாமி உழைக்கிறார்.

200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேலாக மக்களை சந்தித்துள்ளார். மக்கள் அவரை சந்திக்க கடல் போல் திரண்டு வருகிறார்கள். அவரது பேச்சை ரசிக்கிறார்கள். கை தட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள்.

மதுரையில் உள்ள வியாபாரிகள் என்னிடம் எப்போது அதிமுக ஆட்சி வரும், அப்போதுதான் எங்களுக்கு விடிவு காலம் கிடைக்கும் என்கிறார்கள். வியாபாரிகள் இந்த ஆட்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழில் முனைவோர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாமல் தொழிலில் நஷ்டமடைந்துள்ளனர்.

இவர்களுடன் பாஜக கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி. அதிமுக கூட்டணி வைத்தால் தீண்ட தகாத கட்சியா? எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது பிரதமர் வந்தபோது கோபேக் மோடி என்றனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதே பிரதமரை வெள்ளை குடை ஏந்தி மோடியை வரவேற்கின்றனர்.

கூட்டம் கூடுவதை வைத்து ஒருவருக்கு ஆதரவு பெருகிறது என்று சொல்ல முடியாது. நடிகர் சிவாஜிக்கு கூடாத கூட்டமா? அடுக்கு மொழியில் பேசக் கூடிய டி.ராஜேந்தர், பெண்களை கவர்ந்த நடிகர் பாக்யராஜ் ஆகியோர் மேடையில் பேசாத பேச்சா? அவர்களுக்கும் கூட்டம் கூடியது. அதனால், கூட்டம் கூடும். அது ஓட்டாக மாறாது” என தெரிவித்தார்.

அமித் ஷா திமுகதான் ஜெயிக்கும் தன்னிடம் சொன்னதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அவரது பேச்சையெல்லாம் ஒரு கேள்வியாக கேட்கிறீர்கள்.

அவரே அரசியல் எதிர்காலம் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் அனாதையாக நிற்கிறார். அவருடன் இருந்தவர்ளெல்லாம் இங்கே வந்துவிட்டார்கள். அவர் என்ன பண்ணுவார் பாவம்’’ என்றார்.

சசிகலா புதிய கட்சி தொடங்கியது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘‘நான் அது தொடர்பாக எந்தச் செய்தியையும் படிக்கவில்லை. பார்க்கவில்லை’’ என்றார்.

அதற்கு செய்தியாளர்கள், காலையில் நாளிதழ்கள் கூட பார்க்கவில்லையா என்றனர். அதற்கு அவர், ‘‘காலையிலே எழுந்து பரவையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இங்கு வருகிறேன். அதனால், படிக்க முடியவில்லை. படித்திருந்தால் கூட சொல்லியிருப்பேன்’’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *