சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன.
என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
மேலும் அவர் திருப்பரங்குன்றம் சென்று சுவாமி தரிசனம் செய்வார் எனக் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் இன்னும் அழைக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இழுபறி நீடிக்கிறது. இப்படியான நிலையில், மார்ச் 5-ம் தேதி ராகுல் சென்னை வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அன்றைய தினம் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுவார் எனக் கூறப்படுகிறது. அந்த பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுக-வுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு சோனியா காந்தி, கார்கே, ராகுல், பிரியங்கா என அனைத்து தலைவர்களும் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.