சென்னை:
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, உரிமம் பெற்ற 2,364 துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அதற்கு முன்னரே தேர்தல் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் சென்னை காவல்துறை ஈடுபட்டுள்ளது.
அனுமதி பெற்று வைத்துள்ள 2,364 துப்பாக்கிகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க சம்மந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24 சட்டப்பேரவை தொகுதிகள் வருகிறது.
அவற்றில் 5,445 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 1,077 பதற்றமானவை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. சென்னையில் 5,055 ரவுடிகள் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறையில் உள்ளனர். இவர்களில் 2,300 ரவுடிகளிடம் எந்த குற்றமும் செய்ய மாட்டோம் என எழுதி வாங்கி உள்ளோம்.
இந்த உறுதிமொழியை மீறினால் பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்கப்படுவர். பல ரவுடிகள் சென்னைக்குள் நுழையாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள்
வதந்தி, அவதூறு, உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்ய 56 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் ஒருங்கிணைந்து போலீஸார் பணியாற்றுவார்கள். சென்னையில், இதுவரை 7 இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு 350-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னையில் ஒரு இடத்தில், ரோடு ஷோ நடத்த அனுமதிப்பது குறித்தும் ஆலோசிக்கிறோம்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் வருகின்றனர்.
இவ்வாறு ஆணையர் தெரிவித்தார். அப்போது, நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உடன் இருந்தார்.