சென்னை:
சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள இவிஎம், விவிபாட் இயந்திரங்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கப் பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் இடம்பெற்றுள்ள 75,032 வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலில் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகள், முதல்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் மொத்தம் இவிஎம்-ல் தலா 90 ஆயிரம் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 97,500 விவிபாட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில் பயன்பாடு போக, பழுதாகும் போது மாற்றுவதற்கான 20 சதவீத இருப்பு வைப்பு இயந்திரங்களும் அடங்கும்.
மாவட்ட அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி நேற்று நடைபெற்றது.
சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் முன்னிலை யில் இப்பணி நடைபெற்றது.
பணிகள் நிறைவடைந்த பின்னர், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இவிஎம், விவிபாட் இயந்திரங்களின் பட்டியல்கள், மாவட்ட தலைமையிடங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் பகிரப்பட்டது.
இந்த இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படும்.
அவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்தந்த சட்டப்பேரவை தொகுதி காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்த பின்னர், அந்த இயந்திரங்கள் பட்டியல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனும் பகிரப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.