சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதன்பின்னர், 4 பொது விடுமுறை நாட்களில் மனு தாக்கல் நடைபெறவில்லை. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் காலை முதலே மனு தாக்கல் களைகட்டியது.
எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இத்தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய்யின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அதேபோல், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி, சாத்தூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தருமபுரியில் சவுமியா அன்புமணி, காரைக்குடியில் சீமான் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவியின் சொத்துவிவரம் குறித்த சந்தேகங்களால் நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல். தியாகராய நகரில், தவெக வேட்பாளர் என்.ஆனந்த் வேட்புமனு ஏற்கப்பட்டது.