சென்னை:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்கிறார்.
தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்த முதல்வர் விஜய், தமிழகத்துக்குத் தரவேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், 2-வது முறையாக 3 நாள் பயணமாக முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை 11-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் விஜய், கூட்டம் முடிந்த பின்னர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர இந்த பயணத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்கிறார்.
கடந்த முறை டெல்லி சென்ற முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ராகுல் காந்தி வேறு பணியில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
இதற்காகக் காலை 8 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றடையும் முதல்வர் விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 12-ம் தேதி மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 6 மணியளவில் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.