நெல்லை:
“பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை தங்கள் பையில் போட்டுக் கொண்டனர். ஆனால் உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றி கழகத்தில்தான் உள்ளனர்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட திருநெல்வேலி – தூத்துக்குடி புறவழிச்சாலையில் விஜய் இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்கள் உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க? உங்க மகன்,உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன், உங்க நண்பன், உங்க விஜய் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
இந்நேரம் திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால், ஸ்டாலின் கையில் முழு பவரும் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டையைப் போட்டு நம்மை வரவிடாமல் செய்திருப்பார்.
இப்போது அவர் அதிகாரம் இல்லாத ஒரு முதல்வராக இருக்கிறார் இல்லையா? அதனால்தானோ என்னவோ கொஞ்சம் ஈசியா வர முடிந்தது என நினைக்கிறேன்.
திமுக அரசு நமக்கு எவ்வளவோ பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்தார்கள். எவ்வளவோ அவதூறுகளைப் பரப்பினார்கள்.
திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளியில் வேண்டுமானால் தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் இவர்கள் இருவருமே ஒன்றுதான். இவர்கள் இருவருக்குமே ஒரே நோக்கம்தான்.
அது என்ன நோக்கம் என்றால், உங்களுக்காக நல்லது செய்ய, உங்களுக்காக உழைக்க, உங்களுக்கு கூடவே நிற்க இந்த விஜய் வந்துவிடக்கூடாது என்பதே!
நான் வந்தது முதல் இவர்கள் செய்த ஊழல் குறித்து பட்டியல் போட்டுச் சொன்னேன் இல்லையா? அதனால் அதையெல்லாம் அவர்களால் செய்ய முடியாமல் போய்விட்டது. எல்லாத்திலும் மண் விழுந்துவிட்டது.
அதனால் என்மீது செம கோபத்தில் இருக்கிறார்கள். அதோடு, அடுத்து ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையை மக்கள் ஏற்கனவே உருவாக்கிவிட்டார்கள். கூட்டணி கணக்கு, அந்த கணக்கு, இந்த கணக்கு என்று எதுவுமே எடுபடவில்லை. எல்லா கணக்கையும் மக்கள் மண்ணுக்குள் புதைத்துவிட்டார்கள்.
கொள்ளையடித்து வைத்துள்ள பணத்தை எல்லாம் வைத்து கல்லாப்பெட்டி கூட்டணி என்று ஒன்றை சேர்த்து வைத்திருந்தார். அது எல்லாமே தற்போது கலகலத்துப் போய் நிற்கிறது. டாப் தனியா, பாட்டம் தனியா, ஜாய்ண்ட் தனியா என்று எல்லாமே தனித்தனியாக நிற்கிறது.
எல்லாவற்றையும் ஒட்டவைத்துள்ளார். கூட்டணி வைத்துள்ளவர்களே ஒருவருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டார்கள் போல் இருக்கிறது.
திமுக கூட்டணியில் நிலைமை அப்படி இருக்கிறது. இவர்களுக்குத்தான் இப்படி என்றால், பாஜக தலைமையில் உள்ள மற்றும் பலர் அவர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
மக்களே, திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம்ம மேல காண்டு.
இந்த காண்டுக்கு ஒரு காரணம், அவர்கள் வீட்டிலேயே அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம்.
அடுத்த காண்டு, சில பல கோடிகளைக் கொடுத்து ஸ்டாலின், தமிழக காங்கிரஸை பையில் போட்டுக்கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்ம பக்கம் நிற்கிறது.
சிறுபான்மை மக்களுடனான திமுகவின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. இந்த விஜய் மதச்சார்பற்ற கொள்கையோட உண்மையான ஒரு முகமாக இருப்பதாலும், சிறுபான்மை மக்கள் விஜய் பக்கமே நிற்கிறார்கள் என்பதாலும் திமுகவுக்கும் பாஜகவுக்கும் என் மீது காண்டோ காண்டு. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
இந்த 30, 33 வருடங்களாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு மனதுக்குள்ளும் நான் செல்ல நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும்? ஏற்கனவே நான் சொன்னதுபோல கட்சி ஆரம்பித்துவிட்டு பிறகு நான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லவில்லை.
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்ற பிறகுதான் கட்சியையே ஆரம்பித்திருக்கிறேன். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு உறவு.
கட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு உறவு. இது ஒரு பூர்வ ஜென்ம பந்தம். அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு இது என்னவென்றே புரியாது.
மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது தேர்தல். ஆனால், விஜய்க்கும் விஜய் கூட நிற்பவர்களுக்கும் இது ஒரு எமோஷன். நான் சந்தோஷப்பட்டா மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
மக்கள் சந்தோஷப்பட்டால் நான் சந்தோஷப்படுகிறேன். எனக்கு ஒண்ணுனா மக்களுக்கும்; மக்களுக்கு ஒண்ணுனா எனக்கும் கண்ணு கலங்கும்.
கரூர் சம்பவம் பற்றி ஊருக்கே தெரியும். ஆனால், பழியை என்மீது போட்டார்கள். இவ்வளவு பெரிய பழியை விஜய் மீது போட்டாலும் மக்கள் விஜய்கூடவே நிற்கிறார்களே, இது என்ன அதிசயம் என்று அவர்களுக்கு ஆச்சரியம். எனக்கு எதிராக முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், அது எடுபடவில்லை.
அடுத்து என்ன செய்யலாம் என்றுதான், ‘ஜனநாயகன்’ படத்தை முடக்கினார்கள். படத்தை முடக்கினால் நான் விரக்தி அடைந்துவிடுவேன் என்று நினைத்தார்கள். யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தை முடக்கினாலும் அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறானே… அதுவும் எடுபடவில்லை.
அடுத்ததாக, எஸ்ஓபி என்று ஒன்றைப் போட்டார்கள். விஜய்க்கு மட்டும் தனியாக ரூல்ஸ், தனியாக ரெகுலேஷன்ஸ், தனியாக கண்டிஷன்ஸ். மற்றவர்களை எல்லாம் விடு, விஜய்க்கு மட்டும் தனி கண்டிஷன்ஸ் போடு! அவன் வெளியே வரவே கூடாது; மக்களை சந்திக்கவே கூடாது. இப்போ அதுவும் எடுபடவில்லை.
அடுத்ததாக, என்னை சுற்றி இருப்பவர்களை வைத்து, அதாவது இத்தனை வருடங்களாக காத்திருந்து, இப்போது தேர்தலுக்கு 30 நாட்கள் முன்பாக, நேரம் பார்த்து அவதூறு பரப்ப வேண்டியது. அது என்ன என்பது உங்களுக்கே தெரியும். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை.
எத்தனை சோதனைகள், எத்தனை வேதனைகள் நீங்கள் கொடுத்தாலும், திமுகவாலோ,பாஜகவாலோ, மற்றும் பலராலோ யாராலும் மக்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது.
ஒவ்வொரு வீட்டிலும் விஜய்யும் விஜியும் இருக்கும் வரை என்னை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது.
சொந்த பந்தங்கள் இவ்வளவு வலிமையாக இருப்பதால்தான், நான் ஏற்கனவே சொன்னதுபோல 234 தொகுதிளிலும் இந்த விஜய்தான் வேட்பாளர். அப்படித்தான் நான் அதை செய்திருக்கிறேன்.
நமது வேட்பாளர்கள் யாரும் டாடாவோ, அம்பானியோ, பிர்லாவோ, அதானியோ கிடையாது. நமது வீட்டில் இருப்பவரை, நமது குடுமபத்தில் இருப்பவரைத்தான் நான் வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அப்படி தேர்ந்தெடுத்துதான் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். அந்த வேட்பாளர் வேறு இந்த விஜய் வேறு என நினைத்துவிடாதீர்கள்.
இந்த விஜய்தான் வேட்பாளர்; அந்த வேட்பாளர்தான் விஜய். இத்தனை ஆண்டுகளாக யார் யாருக்கோ ஓட்டு போட்டீர்கள்.
ஆனால் இந்த வருடம், உங்கள் வீட்டில் இருக்கும் ஒருத்தருக்கு, நமது குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு நாம் ஓட்டு போடப் போகிறோம். அந்த வேட்பாளருக்கு நீங்கள் ஓட்டு போடுவது நமதுக்கு நாமே ஓட்டு போடுவதுபோல. அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் நாம் வெற்றி பெற்றது போல.
இப்படி ஒரு எமோஷனலான ஒரு தேர்தல தமிழ்நாடு அல்ல இந்தியாவே பார்த்திருக்காது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒருமுறை வரும் தேர்தலைப் போல இதைநினைத்துவிடாதீர்கள்.
இது வேற. இது ஒரு அதிசய தேர்தல். 50 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலைப் போன்றது. எனவே இந்த வாய்பை்பை தவற விட்டுவிடாதீர்கள்.
இந்த தேர்தலில் நமது தவெக ஆட்சி அமைந்தால், அது என்ன அமைந்தால் அமைக்கிறோம். தவெக ஆட்சி அமைந்த உடனே பெண்கள், இளைஞர்கள் எல்லோருமே நல்லா இருப்போம்.
விவசாயிகள், மீனவர்கள் உழைக்கிற மக்கள் எல்லோருமே நல்லா இருப்போம். இன்னும் பல வருடங்களுக்கு நமது குடும்பங்கள், நமது சந்ததிகள், தலைமுறைகள் எல்லோருமே நல்லா இருப்போம்.
எனவேதான் சொல்கிறேன், உங்கள் வோட்டை வேற யாருக்கும் போட்டு வீணாக்கிவிடாதீர்கள். அதனால்தான் வாக்குறுதிகளை பார்த்து பார்த்து அறிவித்து வருகிறோம். செய்ய முடியாததை சொல்லவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
சொல்லாததையும் செய்வோம். அது வேறு விஷயம். ஆனால், செய்யறதை மட்டும்தான் சொல்லுவோம்.
இந்த விஜய் வாக்குறுதிகளை சாத்தியமாக்கிக் காட்டுவான். இதை ஏன் இவ்வளவு வலிமையாக நான் சொல்கிறேன் என்றால், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. மக்களுக்கு தப்பே நடக்காது.
தப்பே நடக்க விட மாட்டேன். மக்கள் பணத்தை ஒரு பைசா கூட நான் தொட மாட்டேன் என நான் சொல்வதைப் போல இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்களும் முன்பு ஆண்டவர்களும் தில்லா சொல்ல முடியுமா? என்னை எதிர்ப்பவர்களால் இப்படி சொல்ல முடியுமா?” இவ்வாறு விஜய் பேசினார்.