பழநி:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.25) வருகை தரவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக 5 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் இன்று கொடைக்கானலுக்கு வருகிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகிறார். இங்கு தனியார் ஹோட்டலில் தங்க உள்ளனர்.
ஏப்ரல் 29-ம் தேதி வரை ஓய்வெடுக்கும் அவர்கள், ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024-ல் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும், ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் வந்து தங்கி ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதேபோல் ஓய்வெடுக்க கொடைக்கானல் வருகிறார். ஓய்வுக்காக செல்வதால், கட்சியினர் யாரும் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என்றும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.