ஜெய்ப்பூர்:
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. நடப்பு சீசனில் ஹைதராபாத்துடன் 2-வது முறையாக மோதுகிறது ராஜஸ்தான் அணி.
இரு அணிகளும் கடந்த 13-ம் தேதி ஹைதராபாத்தில் மோதி இருந்தன. அந்த ஆட்டத்தில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தது. 217 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ் தான் அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது.
பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன் ஆகியோரது வேகப்பந்து வீச்சால் 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை தாரைவார்த்த ராஜஸ்தான் அணியால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது.
இந்த ஆட்டத்தில் பந்துவீச்சிலும் ராஜஸ்தான் அணி தொடக்க ஓவர்கள், நடுகள ஓவர்கள், இறுதிக்கட்ட ஓவர்கள் என எதிலுமே சிறப்பாகச் செயல்படவில்லை.
அனைத்துத் துறைகளிலுமே அவர்கள் தடுமாறினர். எனவே, கடந்த முறை எங்கு சொதப்பினார்களோ, அந்த இடங்களில் தங்களின் தகுந்த பதிலடியைக் கொடுக்க தற்போதைய போட்டியை ராஜஸ்தான் அணி சரியான வாய்ப்பாக அவர்கள் கருதுவார்கள்.
ஒட்டுமொத்தத்தில் முந்தைய தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் ஆகியோர் பேட்டிங்கில் தங்களது அதிரடியால் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
15 வயது ஆன சூர்யவன்ஷி, 220.86 என்ற பிரமிக்கத்தக்க ஸ்டிரைக் ரேட்டுடன் 254 ரன்கள் விளாசி உள்ளார்.
இரண்டு முறை வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டியிருந்தார். ஜெய்ஸ்வால் தொடக்கத்தில் நிதானத்தையும் அதே சமயம் அதிரடியையும் வெளிப்படுத்தி, 49.00 என்ற சராசரியுடன் 245 ரன்களைச் சேர்த்துள்ளார்.
பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஏழு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்ததோடு, முக்கியமான விக்கெட்டையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
இவர்களிடம் இருந்து மேலும் சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும்.
இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தால் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்த போதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
7 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும்பாலும் தங்களின் அதிரடியான டாப்-ஆர்டர் பேட்டர்களையே நம்பியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக மின்னல் வேகத்தில் சதம் விளாசிய உத்வேகத்துடன் இருக்கும் அபிஷேக் சர்மா, அதே அதிரடியைத் தொடர ஆர்வமாக இருப்பார்.
அந்த ஆட்டத்தில் அவர், 68 பந்துகளில் 135 ரன்கள் விளாசியிருந்தார். டிராவிஸ் ஹெட், கேப்டன் இஷான் கிஷன், ஹெய்ன்ரிச் கிளாசன் ஆகியோரும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தங்களின் அறிமுக ஆட்டத்திலேயே பிரஃபுல் ஹிங்கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தாலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பந்துவீச்சுப் பிரிவு ஒப்பீட்டளவில் அனுபவமற்றது.
எனினும் சமீபத்திய போட்டிகளில் அந்த அணியின் பந்துவீச்சு துறை முன்னேற்றம் கண்டுள்ளது.
இஷன் மலிங்கா நெருக்கடியான தருணங்களில் விக்கெட் கைப்பற்றுவது பலம் சேர்த்துள்ளது.