ஹைதராபாத்:
எஃப்.ஐ.எச் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – இத்தாலி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறகிறது.
தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் விளையாடி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது.
இதனால் இந்திய மகளிர் ஹாக்கி அணி, தற்போது தகுதி சுற்றில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி ஓரடி முன்னேறும் வகையில், இன்று நடைபெற உள்ள அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி இத்தாலியை எதிர்கொள்கிறது.
இத்தாலி அணி ‘ஏ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்திருந்தது. அந்த அணி தலா ஒரு வெற்றி, தோல்வி, டிராவை பதிவு செய்திருந்தது.
இந்திய அணியில் நவ்னீத்கவுர் சிறந்த பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் 4 கோல்கள் அடித்துள்ள அவர், அதிக கோல்கள் அடித்துள்ள வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதேவேளையில் மறுபுறம் இத்தாலி அணி தங்களின் தாக்குதல் வீராங்கனையான ஃபெடரிகா கார்டா மீது அதிக நம்பிக்கை வைக்கக்கூடும். நடப்பு தொடரில் அவர், இதுவரை 3 கோல்கள் அடித்துள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், இத்தாலி அணியை விட இந்திய அணியே அதிக பலத்துடன் காணப்படுகிறது. 2012 முதல் இரு அணிகளும் நேருக்கு நேர் 7 முறை மோதி உள்ளன.
இதில் இந்தியா 5 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இத்தாலி ஒரு ஆட்டத்தில் வெற்றியும், ஒரு ஆட்டத்தை டிராவும் செய்திருந்தது.