கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே கண்டெடுக்கப்பட்ட கடல்சார் புதை படிமங்கள் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என இந்திய விலங்கியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கீழக்கரை முதல் திருச்செந்தூர் வரையிலான கடற்கரை மண்டலத்தை ‘பண்டைய கடல்சார் பாரம்பரிய மண்டலமாக’ அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தருவைகுளம் அருகே பட்டினமருதூர், பனையூர் பகுதிகளில் பழமை வாய்ந்த செவ்வக வடிவிலான கிணறு,முதுமக்கள் தாழி, பழமையான ஓடுகள், இரும்புகள், பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இப்பகுதிகளில் நீர் மற்றும் நிலப்பரப்புக்கு கீழ் புதையல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் இருப்பதால் இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், மத்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த ஜனவரி மாதம் பனையூர் பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரம் ஆய்வு செய்தனர்.
அப்போது சிறியஅளவிலான சிப்பிகள் உள்ளிட்டவற்றை சேகரித்து ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக இந்திய விலங்கியல் ஆய்வு மையம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பனையூர் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கடல்சார் புதைபடிமங்கள் 8 ஆயிரம் முதல் 12ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: பனையூரில் கண்டெடுக்கப்பட்ட சிப்பிகள் (Magallana) மற்றும் கிளிஞ்சல்கள் (Meretrix casta) போன்ற சிற்றினங்கள், அலைகளின் வேகம் குறைவாக உள்ள அமைதியான கடல் அல்லது முகத்துவாரச் சூழலில் மட்டுமே செழிக்க கூடியவை.
பனையூரில் தற்போதைய கடற்கரையிலிருந்து 5 முதல் 7 கி.மீ. உள்நோக்கி இந்த புதை படிமங்கள் கண்டறியப்பட்டிருப்பது, ஹோலோசீன் காலத்தில் கடல் மட்டம் உயர்ந்து ஆழமான வளைகுடாக்களை உருவாக்கி இருந்ததை நிரூபிக்கிறது.
இந்த படுக்கைகளில் சிப்பிகள், கிளிஞ்சல்கள் போன்ற 100-க்கும் மேற்பட்ட மாதிரிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பனையூர் புதைபடிவப் படுக்கைகள் வெறும் ஓடுகளின் தொகுப்பு மட்டுமல்ல.
அவை, சுமார் 8,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹோலோசீன் ஊழிக்காலத்தின் உயர்தர உயிரியல் ஆவணம் ஆகும் என விலங்கியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பாண்டிய வம்சத்தின் வரலாறு மற்றும் மறைந்த நகரங்களான கபாடபுரம், தென்மதுரையை ஆய்வு செய்பவர்களுக்கு, இலக்கியங்களில் கூறப்படும் கடல்-கோள் நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் புவியியல் சான்றாக அமைகிறது.
கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த உயிரினங்களின் உருவ அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
இது மன்னார் வளைகுடா உலகின் மிக நிலையான கடல் சூழலமைப்புகளில் ஒன்றாக இருந்ததைக் காட்டுகிறது.
எனவே, கீழக்கரை முதல் திருச்செந்தூர் வரையிலான இந்த வரலாற்று மற்றும் அறிவியல் சிறப்புமிக்க கடற்கரை மண்டலத்தை ‘பண்டைய கடல்சார் பாரம்பரிய மண்டலமாக’ அறிவிக்க வேண்டும்.
இந்த பாதுகாக்கப்பட்ட வளைகுடாக்களின் புவியியல் வரலாறு மற்றும் இந்தியாவின் கடல்சார் வளங்களில் அவற்றின் பங்கை விளக்கும் வகையில் தூத்துக்குடியில் தேசிய புவி பூங்கா அமைக்க வேண்டும்.