புதுடெல்லி:
ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் 4 மாதத்தில் ரூ.1 கோடி ஈட்டிய 24 வயது இளைஞர் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
அவரது அடுத்த இலக்கு ரூ.10 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.
உ.பி. மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த உஜ்வல் நர்கோட்ரா என்ற 24 வயது இளைஞர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லிங்க் பிளீஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இதைத் தொடங்கிய 4 மாதங்களிலேயே ரூ.1 கோடியை அவர் ஈட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இதற்கு முன்பு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.
பின்னர் அதை விட்டுவிட்டு இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினேன். என்னுடைய வளர்ச்சிக்குப் பின்னால் 3 கட்ட செயல் திட்டம் உள்ளது.
படைப்பாளிகள் (கன்டென்ட் கிரியேட்டர்ஸ்) உயர் தரமான உள்ளடக்கத்தை உருவாக்கினாலும், அதிக அளவிலான நேரடிச் செய்திகளை (டி.எம்) நிர்வகிப்பதில் சிரமப்படுகின்றனர்.
அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதுதான் எங்களது நிறுவனத்தின் பணியாகும்.
படைப்பாளிகள் சிறந்த உள்ளடக்கத்தை வெளியிட்டாலும், அதைத் தொடர்ந்து வரும் நேரடிச் செய்திகள் மற்றும் அதிக அளவிலான கருத்துகளை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அந்த இடைவெளிதான் அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. அதைத் தீர்க்கவே இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினோம்.
தொடக்கத்தில் எங்களது தளத்தின் பயன்பாட்டை கட்டணமின்றி படைப்பாளிகளுக்கு வழங்கினோம்.
எங்களது நோக்கம் அதுவாகவே இருந்தது. அது எங்களை மிக எளிதாக எல்லோரையும் அணுக உதவியது.
குறைவான செலவில் ஆற்றல்மிக்க ஆட்டோமேஷன் இன்ஜினை வடிவமைத்தோம். அந்த முதல் பதிப்பை வி1 அறிமுகம் செய்தோம்.
அதன் மூலம் படைப்பாளிகளிடம் இருந்து எங்கள் தளத்தின் பயன்பாடு சார்ந்து பல்வேறு பின்னூட்டங்களை பெற்றோம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களது தளத்தின் சேவையை ஆரம்ப நிலையிலேயே படைப்பாளிகள் பலர் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொண்டோம்.
இதன் மூலம் ரூ.1 கோடியை 4 மாதங்களில் ஈட்டியுள்ளேன். எனது அடுத்த இலக்கு ரூ.10 கோடியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“நிதி ஆதார உதவி ஏதுமின்றி நான்கு மாதத்தில் ரூ.1 கோடியை ஈட்டியுள்ளோம்.
இதன் பின்னணியில் குழு எதுவும் இல்லை. எங்களது நோக்கத்துக்கு செயல் வடிவம் மட்டுமே கொடுத்தோம். படைப்பாளிகள் எதிர்கொண்ட சிக்கலுக்கு விரைந்து தீர்வு கண்டோம்.
இப்போது அதற்கான பலனை வெகுமதியாக சந்தை எங்களுக்கு வழங்கியுள்ளது. இது ஆரம்பம் மட்டும்தான்” என தான் பகிர்ந்த வீடியோவுக்கு கேப்ஷன் உஜ்வல் கொடுத்துள்ளார்.
இணையவாசிகள் ரியாக்ஷன் என்ன? – உஜ்வலின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதே நேரத்தில் இதற்கு கலவையான கமெண்ட்கள் வந்துள்ளன.
அவரது இந்த ஸ்டார்ட் அப் முயற்சியை பலரும் பாராட்டி உள்ளனர். சிலரோ அவரது ரூ.10 கோடி டார்கெட்டை அடைவதற்கான யோசனையை முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.