சென்னை
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
2 வாரங்களில் இந்த கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திடீரென இது போன்று டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலமாக டாஸ்மாக் பார்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரும் மாற்று வேலை இன்றி தவிப்பதாகவும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளில் செயல்படும் 3 ஆயிரம் பார்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகையில் உள்ள டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை அமைப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் எந்தவித முதலீட்டு செலவுகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்த கடைகளை அமைப்பதற்கான இடங்களை பார் உரிமையாளர்களே தங்களது சொந்த செலவில் செலவு செய்து அதிகாரிகள் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்காக அனைத்து வசதிகளையும் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் பார் உரிமையாளர்கள் முதலீடாக செய்திருக்கிறார்கள். டாஸ்மாக் நிர்வாகம் எந்த நிதி உதவியும் வழங்காமல் மிகக் குறைந்த அளவிலேயே வாடகையை வழங்கி வருகிறது.
இப்படி டாஸ்மாக் பார் நடத்துவதற்காக முதலீட்டு துறைக்காக வங்கி கடன் மற்றும் தனிநபர் கடன் பெற்று ஒவ்வொரு மாதமும் இ.எம்.ஐ. தவணைகளையும் செலுத்தி வருகிறோம்.
இப்படி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாங்கள் பார் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் அருகில் உள்ள 717 கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருப்பது எங்களை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும்.
முறையான முன்னறிவிப்பு இன்றி எடுக்கப்பட்டு உள்ள இந்த திடீர் நடவடிக்கையின் மூலமாக 2 வாரங்களுக்குள் கடையை மூடுவது என்பது இயற்கை நீதிக்கு எதிராக உள்ளது.
எனவே டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பார்களை மூடுவதால் ஏற்படும் தொழிலாளர் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மூடப்பட்ட கடைகளில் விற்பனையாகும் மது பாட்டில்களை அருகில் உள்ள கடைகளில் கொண்டு மொத்தமாக சேர்த்து விடுவதாகவும் இதன் மூலம் மூடப்பட்ட கடைக்கு அருகில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடைகளில் அதிக கூட்டம் ஏற்பட்டு பலரும் பொது வெளியில் இருந்து மது அருந்துவதாகவும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே டாஸ்மாக் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலம் கருதி மூடப்பட்ட கடைகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதும் இவர்களது கோரிக்கையாக உள்ளது.
டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் இன்று தங்களது கோரிக்கைகளுக்காக மனு அளித்துள்ள நிலையில் இதற்கு தீர்வு ஏற்படாத பட்சத்தில் தொடர்ந்து பார்களை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மனு அளித்தபிறகு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்க தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த ஆட்சியில் டாஸ்மாக் பார்களை நடத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தோம். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு திடீரென எந்தவித முன்னறிவும் இன்றி கடைகளை மூட உத்தரவிட்டிருப்பதை ஏற்க முடியாது.
இது எங்கள் பிரச்சனை மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சனை ஆகும். கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் அருகில் 500 மீட்டர் சுற்றளவில்தான் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் உள்ளன.
அவை அனைத்தையும் மூடிவிட்டு அரசு வேண்டுமானால் நடமாடும் வாகனங்கள் மூலமாக மது விற்பனை செய்து கொள்ளட்டும். டாஸ்மாக் கடைகளை நடத்துவதற்கு நாங்கள்தான் கட்டிடங்களை தயார் செய்து கொடுத்துள்ளோம். அந்த கடைகளை காலி செய்துவிட்டு எங்களிடம் சாவியை கொடுத்துவிடுங்கள்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு பார்களை நடத்த முடியவில்லை என்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி விடுங்கள். நாங்கள் வேறு வேலைகளுக்கு சென்றுவிடுகிறோம். அதை விடுத்துவிட்டு எங்கள் வாழ்வாதாரத்தோடு விளையாட வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.