நாங்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் துணை நிற்போம் – செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் பல்டி!!

மேட்டுப்பாளையம்:
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவிதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.

இதையடுத்து செங்கோட்டையன் வகித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

இந்தநிலையில் கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் நேற்று மேட்டுப்பாளையம் வந்து ஏ.கே.செல்வராஜை சந்தித்து பேசினர். அவருக்கு சால்வை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களுடன் செங்கோட்டையனின் ஆதரவாளர் என கூறப்படும் பவானிசாகர் தொகுதி எம்.எல்.எ. பண்ணாரியும் நேற்று ஏ.கே.செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரமணிதரன், சரஸ்வதி, முன்னாள் எம்.பி. காளியப்பன் உள்ளிட்ட ஈரோட்டின் முக்கிய நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

பின்னர் பண்ணாரி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் துணை நிற்போம். அதனால் தான் இன்று ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் திரண்டு வந்துள்ளனர் என்றார்.

ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க. என்னும் மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை.

இயக்கம் தான் பெரிது. தனி நபர் அல்ல என இங்கு வந்துள்ள இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற ஒருங்கிணைந்து இயங்குவோம் என்றார்.

செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் பலர் கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையத்தில் குவிந்த ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ணாரி எம்.எல்.ஏ. செங்கோட்டையனின் ஆதரவாளராக அறியப்பட்டவர். செங்கோட்டையன் கூட்டங்களில் அவரும் பங்கேற்று வந்தார். இந்தநிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியது ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *