ராமேசுவரம்:
இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது உயிரிழந்தோருக்கு 17-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையின் உள்நாட்டுப் போரில் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதை நினைவு கூரும் வகையில் மே 18-ம் தேதியை இன அழிப்பு நாளாக வடக்கு மாகாண சபையில் பிரகடனம் செய்து அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிலையில், இறுதிப் போரில் உயிரிழந்தோருக்கு 17-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.பின்னர் வெளியிடப்பட்ட மே 18 பிரகடனத்தில் ‘தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கையின் மீது உறுதி கொண்டு ஒரு குடையின்கீழ் தமிழ் இன அடக்குமுறைக்கு எதிராகவும், தமிழின விடுதலையை நோக்கியும் முனைப்புடன் போராடுவோம்’ என அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அனைத்து சமூகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.