சென்னை:
“தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி இன்றும் நான் வலியுறுத்தினேன்.
ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இப்படித்தான் நடைமுறை என சொல்லிவிட்டார்கள்.
அடுத்து தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் ஒலிக்கும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. அப்போது இதுபற்றி பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இனிமேல் இதுபோல நடக்காது என்று விளக்கமளித்தார்.
இந்தச் சூழலில், இன்று 23 தமிழக அமைச்சர்கள் பதவியேற்ற விழாவிலும், அதேபோல மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன், “எந்த தலைமுறைக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டதோ, அவர்களெல்லாம் இன்று கல்வி வழங்கும் இடத்துக்கு உயர்ந்துள்ளனர்.
ஒரு ஜென்ஸீ தலைமுறை அரசியல் பழகியது, ஒரு ஜென்ஸீ தலைமுறை இன்றிலிருந்து அதிகாரம் பழகவுள்ளது.
இதற்கு காரணம் முதல்வர் ஜோசப் விஜய். இந்த தலைமுறை மாற்றத்தில், அமைச்சரவையில் சமூக நீதி என்பது சரியாக பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது.
பல பெண் அமைச்சர்கள், ஒடுக்கப்பட்டோரின் குரல் சட்டப்பேரவையிலும், அமைச்சரவையிலும் ஒலிக்கிறது.
இன்று அமைச்சரவையில் பதவியேற்க காங்கிரஸ் தோழர்கள் வரும்போது பெரும் கரவொலி எழுந்தது. இது 60 – 70 ஆண்டுகளாக காத்திருந்த வலி.
வெறும் கூட்டணி மட்டும் வைத்துக்கொண்டு, அதிகாரத்தை கொடுக்காமல் இருந்த காலம் போய்விட்டது. இளைஞர்கள் பலர் அமைச்சர்களாக வந்துள்ளனர், அவர்கள் விரைவாக பழகிக் கொள்வார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி இன்றும் நான் வலியுறுத்தினேன்.
ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இப்படித்தான் நடைமுறை என சொல்லிவிட்டார்கள்.
அடுத்து தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் ஒலிக்கும்.
தமிழ்நாடு அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழுக்கே முதலிடம்” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.