கோவையில் இன்று பிரதமர் கலந்து கொள்ளும் சாலை வாகன பேரணி நடைபெறுவதையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,’கோயம்புத்தூரில் பிரதமர் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட ரோட்ஷோ நிகழ்ச்சி மக்களின் பேராதரவோடு இன்று மாலை நடைபெற உள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக தென்னிந்தியா முழுவதும் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நாளை சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமரின் தமிழக வருகை தமிழக பாஜகவை வலுப்படுத்துவதோடு, பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பிரதமர் பணியாற்றி வருகிறார். இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவருக்குமான வளர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க பிரதமர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்’ என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்றும், தேசிய வளங்களை கொள்ளை அடித்து ஊழல் செய்யும் கட்சிகள் எனவும் விமர்சித்தார்.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மிகப்பெரும் ஊழல் செய்தது திமுகவின் ஆ.ராஜா என குற்றம் சாட்டியவர், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என குறிப்பிட்டார்.
‘தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் எப்படி நிதி பெற்றதோ அதேபோல்தான் பாஜகவிற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் என்பது தனி நபர்கள் அவர்களாக முன்வந்து நன்கொடை வழங்குவது.கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் ஊழலற்ற அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.
பல்வேறு ஊழல்களை செய்த திமுகவிற்கு ஊழல் குறித்து பேச தகுதி இல்லை.தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் குறித்த தெளிவான விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்றம் அவர் குற்றம் அற்றவர் என கூறவில்லை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. மோடி மீண்டும் மூன்றாவது முறையாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மீண்டும் பிரதமர் ஆவார் என்பது உறுதி.
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளிவரும்.கோயம்புத்தூர் பாஜகவின் மிகப்பெரிய கோட்டையாக உள்ளது. பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கிருந்து வந்துள்ளனர்.
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நீலகிரி தொகுதியை பொருத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு கட்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
நீலகிரி மட்டுமின்றி கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய பகுதிகளிலும் மக்கள் வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். நான் அங்கு போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்’ என கூறினார்.