சென்னை:
ராயபுரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை, 5 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் கீதா (29).
இவர், கடந்த 13-ம் தேதி ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். 15-ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் அவருக்கு அறிமுகமான கொடுங்கையூரைச் சேர்ந்த அமுலுக் பவரோஸ் மேரி (29) என்ற பெண், டிஸ்சார்ஜ் செய்த பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்வதாக கூறி, கீதாவின் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை கடத்திச் சென்றார்.
இது தொடர்பாக, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து, குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்டனர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட அமுலுக் பவரோஸ் மேரி, உடந்தையாக இருந்த அவரது கணவர் தாமஸ் (32) ஆகிய இருவரையும் கடந்த 24-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸாரான ராயபுரம் உதவி ஆணையர் பிரமானந்தன், காசிமேடு சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் மைனர்சாமி, உதவி ஆய்வாளர் கோபிநாத், தலைமைக் காவலர்கள் ஜீவா, கோபிநாத், முத்துகுமார், இளங்கோவன் ஆகிய 7 பேரை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.