65 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் விக்டோரியா ஹால்!

சென்னை,
சென்னை மாநகரம்.. பழமையும், புதுமையும் கலந்த கட்டிடங்களை கொண்ட பாரம்பரியத்தின் அடையாளம். ஆங்காங்கே வளர்ந்து நிமிர்ந்த கட்டிடங்கள் காணப்பட்டாலும், இடையிடையே ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கலைநய கட்டிடங்களும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.


அந்த பட்டியலில், சென்னை சென்டிரல் ரெயில் நிலைய கட்டிடம் – பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்திற்கு இடையே சிகப்பு நிறத்தில் காணப்படும் விக்டோரியா பப்ளிக் ஹாலும் ஒன்று.

65 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இந்த கட்டிடத்தை பற்றி இப்போதைய தலைமுறையினருக்கு எதுவும் தெரியாது.

1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் பொன் விழாவை குறிக்கும் வகையில், விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை இந்தோ – சாரசானிக் முறையில் வடிவமைத்தவர் ஆர்.எப்.சிம்ஷாம். கட்டிடத்தை கட்டியவர் டி.நம்பெருமாள் செட்டியார்.

அப்போதைய மாநகராட்சியிடம் இருந்து 99 ஆண்டு குத்தகைக்கு பெறப்பட்ட 3.14 ஏக்கர் நிலத்தில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் செலவில் விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் நீளம் 48 மீட்டர். அகலம் 24 மீட்டர். உயரம் 19 மீட்டர். கோபுரத்தின் உயரம் 34 மீட்டர்.

இந்த கட்டிடத்திற்கு என்று பெரிய வரலாறு இருக்கின்றது. 1897-ம் ஆண்டு விக்டோரியா பப்ளிக் ஹாலில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், கோபாலகிருஷ்ண கோகலே உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றி இருக்கிறார்கள்.

இதுமட்டுமா, மின்சாரம், எரிவாயு விளக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஹாலில் தான். 1895-ம் ஆண்டு முதன் முறையாக சினிமா திரையிடப்பட்டதும் இங்குதான். அண்ணாவின் நாடகங்களும் இங்கே அரங்கேறியிருக்கின்றன. அண்ணாவும், எம்.ஜி.ஆரும் முதன் முதலில் சந்தித்து கொண்ட இடமும் இதுதான்.

இப்படி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடையாளமான விக்டோரியா பப்ளிக் ஹால், 1960-ம் ஆண்டுகளுக்கு பிறகு முக்கியத்துவம் இழக்க தொடங்கியது. காரணம், அதைவிட பெரிய அரங்கங்கள் நிறைய வந்ததால் இந்த அவலநிலை ஏற்பட்டது. கட்டிடமும் சிதிலம்அடையத் தொடங்கின.

1986-ம் ஆண்டுடன் குத்தகை காலமும் முடிந்ததால், அந்த இடத்தை கையகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.

ஆனால், அறக்கட்டளையின் கீழ் இருந்த விக்டோரியா பப்ளிக் ஹாலை மீட்க முடியவில்லை. அவர்கள் கோர்ட்டுக்கு சென்றதால், பல ஆண்டுகளாக அந்த கட்டிடம் பொலிவு இழந்து காணப்பட்டது. யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், 2009-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு முடிந்து, விக்டோரியா பப்ளிக் ஹால் மாநகராட்சியின் வசம் வந்தது.

அப்போதே இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்றாலும், பல்வேறு காரணங்களால் பணிகளை முடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியே 62 லட்சம் செலவில் விக்டோரியா பப்ளிக் ஹால் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. தற்போது இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

தரைத்தளத்தில் 600 பேரும், இடைத்தளத்தில் 600 பேரும், பால்கனியில் 200 பேரும் என மொத்தம் 1400 பேர் அமரும் வகையில் இடவசதி கொண்ட விக்டோரியா பப்ளிக் ஹாலை வரும் 20-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

65 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் வர இருக்கிறது. வாடகைக்கு விடப்பட இருக்கும் இந்த கட்டிடத்தில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகளை நடத்திக்கொள்ளலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *