சென்னை:
“பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும். மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல் வருகிறது.
இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அதிமுக எம்.பி தனபால் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தவெகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.
மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல். ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டனர்.
மேலும், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
அதைத்தொடர்ந்து, இரு அணியினரும் சட்டப்பேரவை அதிமுக தலைவர், கொறடாவைத் தேர்ந்தெடுத்து, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்திருந்தனர்.
அதேபோல், இரு அணியினரும் எதிரணியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யுமாறும் அவரிடம் கடிதம் அளித்தனர்.
இதற்கிடையே, சி.வி.சண்முகம் அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
மேலும், ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்ட 6 எம்எல்ஏ.க்கள், பழனிசாமி அணிக்கு மாறினார். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆகக் குறைந்தது.
இந்நிலையில், சி.வி.சண்முகம் அணி எம்எல்ஏக்களான எஸ்.பி.வேலு மணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் நேற்று சந்தித்து சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இரு அணியினரும் தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு இரு அணிகள் சார்பிலும், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே அளித்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
மேலும், அதிமுகவின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக பழனிசாமி, கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர்.
ஒருவழியாக அதிமுக உள்ளரசியல் முடிவுக்கு வந்த நிலையில், “பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.
மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல் வருகிறது.
இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அதிமுக எம்.பி தனபால் வலியுறுத்தியுள்ளார்.