சென்னை:
தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று நடந்தது.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை தற்போது அந்தமானில் ஒருவாரமாக பெய்துவருகிறது.
வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கேரளா, தமிழகப் பகுதிகளில் மழை பெய்ய இருக்கிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரிடர் பணிகளை அரசுடன் இணைந்து செயல்படுத்த பல்வேறு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட வாரியாக தயார் நிலையில் உள்ளனர். மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்யத் தயாராக உள்ளது.
குறிப்பாக, கனமழை நேரங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் பணிகளைச் செய்ய இத்துறை விரைவாக செயலாற்றி வருகிறது.
அதனால் கனமழை போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.