நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நகர் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்கிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணையில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறில் 4 மில்லிமீட்டரும், கன்னடியனில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 115.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 122 அடியாகவும் உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 1496 கனஅடி நீர்வரும் நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வெயில் தலைகாட்டவில்லை. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. களக்காடு சுற்றுவட்டாரத்தில் 1.40 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கார் பருவ சாகுபடி பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். கடனா அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து இன்று 65 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 125 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 3 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 71 அடியாக இருந்த ராமநதி இன்று 2 அடி உயர்ந்து 73 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 129 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் இன்று காலை நிரம்பியது. அணை இந்த ஆண்டு 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
இந்த வருடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடவிநயினார் கோவில் அணையானது கார் சாகுபடி காலங்களில் 5 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்ததாலும், அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தினாலும் நீர்மட்டமானது வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக அணையானது 2-வது முறையாக நிரம்பி உள்ளது.
தற்போது 100 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவை அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதால் அனுமன்நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.