இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தைப் பகிர்ந்த ராம் சரண்!!

சென்னை:
பிரபல நடிகர் ராம் சரண் மற்றும் அப்பல்லோ குழுமத்தின் நிறுவனர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தியும், தொழிலதிபருமான உபாசனா கொனிடேலா தம்பதிக்கு அண்மையில் இரட்டைப் குழந்தைகள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) பிறந்தன.

தங்களது மூன்று பிள்ளைகளின் கைகளும் இணைந்து இருக்கும் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தை உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜூன் 2012-ல் ராம் சரண்-உபாசனா தம்பதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஜூன் 20 அன்று ‘க்ளின் காரா’ என்ற முதல் மகள் பிறந்தார். தற்போது இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதைத் தொடர்ந்து திரையுலகினரும் ரசிகர்களும் தங்களதுவாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராம் சரண் தனது குழந்தைகளுக்குப் பெயரிட்டதன் பின்னணியில் உள்ள காரணங்களை நேர்காணல் ஒன்றில் விளக்கியுள்ளார்.

ஆண் குழந்தை ஷிவ்ராம் என்ற பெயர் பக்தி மற்றும் குடும்பப் பாரம்பரியத்தைக் குறிக்கிறது.

சிவபெருமான் மற்றும் ராமரின் பெயர்களைக் கொண்டு உருவான இது, “கட்டுப்பாட்டுடன் கூடிய வலிமை மற்றும் கருணையுடன் கூடிய நீதி” ஆகியவற்றைக் குறிக்கிறது.

மேலும், ராம் சரணின் தந்தையான மெகாஸ்டார் சிரஞ்சீவியின் இயற்பெயர் ‘சிவ சங்கர வர பிரசாத்’ என்பதால், அவரது நினைவாக ‘சிவ்’ என்ற வார்த்தை இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தை அன்வீரா தேவி ‘வீரா’ என்றால் வீரம் அல்லது தைரியம் என்று பொருள்.

‘அன்’ என்பது அதை எல்லையற்ற ஒன்றாக மாற்றுகிறது. “வலிமையும் கனிவும் ஒரே நேரத்தில் ஒருவரிடம் இருக்க முடியும்” என்பதை நினைவூட்டும் விதமாகவே ‘தேவி’ என்ற வார்த்தை இணைக்கப்பட்டுள்ளது அவர் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாகத் தாயான அனுபவம் குறித்து உபாசனா பேசுகையில், “முதல் முறை எல்லாமே புதியதாக இருந்ததால் ஒருவித பயமும் பதற்றமும் இருந்தது.

ஆனால், இந்த முறை மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் உணர்கிறேன். சிறு விஷயங்களுக்கெல்லாம் இப்போது நான் பதற்றமடைவதில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், மூத்த மகள் க்ளின் காரா மற்றும் தற்போது பிறந்துள்ள இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து மூன்று குழந்தைகளையும் ஒரே நேரத்தில் கவனிப்பது சவாலானது என்றாலும், அது ஒரு முழுமையான மகிழ்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை வளர்ப்பில் ராம் சரண் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும், குறிப்பாக மூத்த மகள் காராவை அவர் மிகவும் பொறுப்புடன் கவனித்துக் கொள்வதாகவும் உபாசனா பாராட்டியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *