புதுச்சேரி:
தமிழகத்தில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் முதல்வரும், தமிழக தவெக முதல்வரும் பேச என்ன தடை உள்ளது ? என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வர் ரங்கசாமிக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும். ஆட்சி அமைத்து 60 நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்காதது, பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தாதது குறித்து கேட்கிறீர்கள்.
புதுச்சேரியில் பாஜக “மைனாரிட்டி பார்ட்னர்”. முதல்வர் தான் முடிவு எடுப்பார். இதற்கு முதல்வர் ரங்கசாமி தான் பதில் தர வேண்டும்.
நாங்கள் நடவடிக்கை எடுத்தால் பெரியக் கட்சி என்பதால் செய்கிறீர்களா என்பார்கள்.
இதுபோல் செயல்பட்டால் சரண் அடைந்து விட்டீர்களா என்று கேட்கிறீர்கள். என்டிஏ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த காங்கிரஸார் முயல்கின்றர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியை போலவே தொடர்கிறது.
தூய சக்தி என்று கூறும் தவெக ஆட்சியில், பெண்கள் சிறப்பு பிரிவுக்கு பெயர் மற்றும் சீருடை மாற்றம் தான் நடந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் திமுக, தவெகவுக்கு இடையே வித்தியாசமில்லை. மகளிருக்கு எதிரான குற்றங்களில் மாற்றமில்லை.
தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காத தவெக, கட்சிகளின் குழப்பத்தை பயன்படுத்துகிறார்கள். குதிரை பேரத்தை சிறப்பாக தவெக செய்கிறது. மேகேதாட்டு விவகாரத்தில் மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது.
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக, புதுச்சேரி உரிமைகளை பாஜக ஒரு போதும் விட்டுகொடுக்காது. தமிழகம் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணைக்கட்ட முடியாது.
தற்போது காங்கிரஸார் தமிழக தவெக ஆட்சியிலும் பங்கு வகிக்கிறார்கள்.
கர்நாடக காங்கிரஸ் முதல்வரும், தமிழக தவெக முதல்வரும் பேச என்ன தடை உள்ளது? கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு எதிரான மக்கள் கோபத்தை திசை திருப்பவே மேகேதாட்டு பிரச்சினையை கர்நாடக முதல்வர் சிவக்குமார் கையில் எடுத்துள்ளார்.
மக்கள் பிரச்சினையில் தாராளமாக ஆளுநரிடம் மனு தரலாம். அரசை கவனிக்க சொல்ல ஆளுநருக்கு அதிகாரமுள்ளது.
அதிகாரத்தில் ஆளுநர் எங்கு தலையிடுகிறார்? பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இதுபோல் செயல்படுகிறார்கள். ஆளுநரும், முதல்வரும் மக்கள் நலத்திட்டங்களுக்காகத்தான் உள்ளனர்.
திமுக ஆட்சியில் அதிமுகவின் திட்டங்களை பெயர் மாற்றுவதும், அதிமுக ஆட்சியில் திமுக திட்டங்கள் பெயர்களை மாற்றுவதும் வாடிக்கையானது.
அதேபோல தவெகவும் திமுகவின் திட்டங்களை பெயர் மாற்றுவது, கல் வெட்டு மாற்றுவது, பெயர் பலகை அகற்றும் வேலையை செய்கின்றனர்.
உண்மையான மாற்றம் தமிழகத்தில் இல்லை. ஸ்டிரீயோ டைப் போல் செயல்படுகிறார்கள்.
தவெக அரசு புதிதாக வந்துள்ளனர். அரசியல் அனுபவம், ஆட்சி நடத்தும் அனுபவம் இல்லை. தேவைப்படும் இடத்தில் கடுமையை பாஜக காட்டி, போராட்டத்தையும் நடத்துவோம்.
தவெக ஆட்சியில், நான் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. அண்ணாமலையால் தமிழகத்தின் பாஜக ஆதரவு, தொண்டர்கள் உற்சாகம் குறையவில்லை.
அவரிடம் சென்றோர் எத்தனை நாட்கள் இருப்பார்கள் என தெரியவில்லை. தமிழக முதல்வர் விஜய், சினிமா வசனம் போல் ஆவேசமாக பேசுகிறார். செயல்பாட்டில் அதுபோல் இல்லை. ஊழலை ஒழிப்போம் என கூறினார்.
ஆனால் மாவட்டந்தோறும் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க அமைச்சரே லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
விவசாயி உயிரிழப்பு சம்பவத்தில், அவரது பயிர் கடன் முழுமையாக ரத்தாகவில்லை என தெரிகிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது தவெக அரசு. முதல்வர் விஜய் உண்மையாக பேசுகிறாரா, இல்லை சினிமா வசனம் பேசுவது போல் பேசுகிறாரா என புரியவில்லை.
சினிமா டயலாக் போல் அவர் ஆவேசமாக பேசுகிறார், ஆனால் செயல்பாட்டில் அதில் இல்லை.
நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் கேட்டுள்ளனர், புது அரசு வந்தவுடன் காசு வாங்கி நியமித்தால் அந்த வழக்கறிஞர்கள் அரசை காப்பாற்றுவார்களா என கேள்வி வருகிறது.
எங்கள் மாவட்டம் அதிக வருவாய் உள்ள மாவட்டம் என்பதால் அதிக குற்றச்சாட்டு வருகிறது. நானும் வழக்கறிஞர் என்பதால் எனகும் நிறைய தகவல் வருகிறது” என்று வானதி சீனிவாசன் கூறினார்.